திருவெறும்பூர் அருகே உள்ள தேசிய தொழில்நுட்ப கழகத்தில் என்.ஐ.டி. பெஸ்ட் என்ற கலை நிகழ்ச்சி  நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடி, அவர்களது கேள்விகளுக்கு பதில் அளித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது;- வெற்றி, தோல்வி இரண்டும் எனக்கு ஒன்றுதான். கே.பாலசந்தர் போன்ற நல்ல ஆசிரியர்கள் எனக்கு கிடைத்தார்கள். வாலி போன்றோரால் நானும் கவிஞனாகும் தகுதி கொண்டேன். எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இளையராஜா போன்றோர் என் குருமார்கள். நாம் பல புத்தகங்களை படிக்க வேண்டும். ஓ.டி.டி. வந்ததால் திரையரங்கு அழியாது. தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும், தற்போது இருக்கும் திரையரங்கு உள்ளிட்டவையும் தொடர்ந்து இயங்கி கொண்டுதான் இருக்கும். இன்னும் விரைவில் நானோ தொழில்நுட்பத்தில் சினிமா பார்க்கும் காலம் வரும். நடனமாக இருந்தாலும் சரி, பொறியியலாக இருந்தாலும் சரி பயிற்சி அவசியம். ஒரு துறையில் சாதிக்க கடுமையான பயிற்சி அவசியம். அரசியல் என்பது உங்கள் கடமை. அது தொழில் அல்ல. வாக்களிக்கும் வயது வந்தால் வாக்காளர் பட்டியலில் பெயரை முதலில் சேருங்கள். வாக்களிப்பது ஜனநாயக கடமை. ஜனநாயக கடமையாற்றவில்லை என்றால் கேள்வி கேட்க உங்களுக்கு அருகதை இல்லை என்று அர்த்தம். ஜனநாயகத்தை நாம் விழிப்போடு பார்த்துக்கொண்டு இருக்க வேண்டும். நம் கடமையை நாம் செய்யவில்லை என்றால் ஜனநாயகம் என நாம் நம்பி கொண்டிருக்கும் பலம், திருடர்கள் கையில்தான் இருக்கும். 






மேலும், தேர்தலில் வாக்களிப்பது என்பது ஜனநாயகத்திற்கு கொடுக்கும் முதல் முத்தம். அந்த முத்தம் கொடுத்தால் தான் ஜனநாயகத்துடன் குடும்பம் நடத்த முடியும். எனவே அனைவரும் வாக்களிக்க வேண்டும். பொறியியல் படித்து வரும் நீங்கள் அனைவரும் ஆக்கப்பூர்வமான பொறியாளராக உருவாக வேண்டும். பின்லேடனும் பொறியாளர் தான். ஆனால் அவர் அழிக்கும் பொறியாளர். அது போல் நம் கல்வி இருக்கக்கூடாது. நீங்கள் கற்பது ஆக்கப்பூர்வமாக மக்களுக்கு பயன்பட வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் கமல்ஹாசனுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. விழாவில் என்.ஐ.டி இயக்குனர் அகிலா, பேராசிரியர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக தனி விமானம் மூலம் நடிகர் கமல் நேற்று மாலை 6 மணி அளவில் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து அவர் காரில் திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்திற்கு புறப்பட்டு சென்றார். பின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு கார் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த அவர், மீண்டும் இரவில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி விமானத்தில் புறப்பட்டு சென்றார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண