தமிழ்நாடு சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்றுதொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது. நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வழிகாட்டுதல்களின்படி (www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது) மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து திருச்சியில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் சிலை கரைப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகர போலீஸ் கமிஷனர் காமினி தலைமை தாங்கி பேசியதாவது: திருச்சி மாநகரில் வருகி்ற 18-ந்தேதி நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் 20-ந்தேதி நடைபெற உள்ள சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது, விநாயகர் சிலைகள் 10 அடிக்குமேல் இருக்கக்கூடாது, அரசியல் கட்சிகள் மற்றும் சாதி தொடர்பான பேனர்கள் வைக்கக்கூடாது. விழா நடைபெறும் இடத்தில் ஒலிபெருக்கி காலை, மாலை ஆகிய நேரங்களில் 2 மணி நேரம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஊர்வலத்தின் போது பட்டாசு வெடிக்கக்கூடாது, சிலைகளை மாட்டுவண்டி, மீன்பாடி வண்டி, 3 சக்கர வாகனங்களில் எடுத்து வரக்கூடாது, சிலை ஊர்வலம் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே செல்ல வேண்டும்.புதிய வழிதடத்தில் செல்லக்கூடாது. மேலும் சிலை வைக்கப்படும் இடத்தின் உரிமையாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகளிடம் தடையில்லா சான்று பெற்றிருக்க வேண்டும், ஊர்வலத்தின் போது எவ்வித கோஷமும் போட அனுமதிக்க கூடாது, சிலை கரைக்கும் போது தேவையற்ற பொருட்களை சிலையுடன் சேர்த்து கரைக்க கூடாது.
மேலும், சிலையை கரைத்த பின் வாகனத்தின் மேற்கூரையில் அமர்ந்து யாரும் பயணிக்க கூடாது. ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்கள் மற்றும் நிர்வாகிகள் யாரும் மது அருந்திவிட்டு வரக்கூடாது, விநாயகர் சிலை நிறுவுவதற்கும் மற்றும் கரைப்பதற்கும் தமிழக அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதலின்படி விழா நிர்வாகிகள் போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும் கூட்டத்தில் விநாயகர் ஊர்வலத்தின் போது, அதன்வழித்தடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்வது குறித்தும், விநாயகர் சிலைகளை கரைக்கும் இடங்களில் செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. கூட்டத்தில் போலீஸ் துணை கமிஷனர்கள், அனைத்து சரக போலீஸ் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.