தே.மு.தி.க. தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த், கடந்த 18- ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்ட நிலையில், சமீபத்தில் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. விஜயகாந்த் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என நம்புவதாகவும், மியாட் மருத்துவமனை தெரிவித்தது. இதனை அடுத்து தொண்டர்கள், விஜயகாந்த் விரைவில் நலம் பெற வேண்டும் என பிரார்த்தனைகள் மேற்கொண்டனர். 




விஜயகாந்தின் உடல்நிலை குறித்து மருத்துவமனையின் மக்கள் தொடர்பாளர் சுதன் ஏபிபி-க்கு அளித்த பிரத்யேக தகவலை பார்க்கலாம். “ விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றமும் இல்லை, பின்னடைவும் இல்லை. அவர் ஆக்ஸிஜன் சப்போர்ட்டில் இருக்கின்றார். அவருக்கு பருவகாலத்தில் ஏற்படக்கூடிய காய்ச்சல் மட்டுமே ஏற்பட்டுள்ளது. மேலும் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் உள்ளது. ஏற்கனவே மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டது போன்று அவர் இன்னும் 10 நாட்களில் டிஸ்சார்ஜாகி விடுவார்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நல பிரச்சினைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார். இதனால் அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை கூட தவிர்த்து வருகிறார்.  விஜயகாந்த் தனது பிறந்தநாள், திருமண நாள் உள்ளிட்ட நாட்களில் தொண்டர்களை சந்திப்பார். சமீபத்திய சந்திப்பின் போது தொண்டர்களை பார்த்து கை அசைத்தார் விஜயகாந்த். அண்மையில் அவரின் உடல்நிலை சீராக இல்லை என வெளியான செய்தியாள் தொண்டர்கள் அப்சட்டில் உள்ளனர். இருந்த போதிலும் விஜயகாந்த் விரைவில் நலம் பெற்று வருவார் என்பதே தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 




இந்நிலையில் தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி தமிழகம் முழுவதும் உள்ள கட்சி தொண்டர்கள் ரசிகர்கள் பலர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி பூஜை செய்தனர். அதேபோல் நடிகர் விஜய் ரசிகர்களும் விஜயகாந்த் நலம் பெற வேண்டி பிரார்த்தனையில் இறங்கி உள்ளனர். திருச்சி அருகே உள்ள திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் நடிகர் விஜயகாந்த் நலம் பெற வேண்டி விஜய் ரசிகர் ஆர்.கே. ராஜா தலைமையில் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மண் சோறு சாப்பிட்டு பிரார்த்தனை செய்துள்ளனர்.


மேலும், இது தவிர திருச்சி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் சார்பில் விஜயகாந்த் பெயருக்கு அங்குள்ள சிவன் மற்றும் பிரம்மபுரீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அவர் பூரண குணமடைய வேண்டும் என பிராத்தனை செய்தனர். இதையடுத்து அந்த கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு விஜய் ரசிகர்கள் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது. விஜயகாந்த் உடல்நலம் பெற வேண்டி விஜய் ரசிகர்கள் செய்த இந்த செயல் மற்ற நடிகர்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.