பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர் காவல்துறை சரகத்திற்கு உட்பட்ட வேப்பந்தட்டை திடீர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜா (32) கல்லுடைக்கும் தொழிலாளி. இவர்களது மகள் மகாலட்சுமி (10). வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமி மகாலட்சுமி சரிவர பள்ளிக்கு செல்லாமலும் வீட்டிலிருந்த பணத்தை எடுத்து செலவு செய்தும் வந்துள்ளார் என கூறப்படுகிறது. இதனால் தாய் மணிமேகலை சிறுமியை அடிக்கடி கண்டித்து வந்துள்ளார். கடந்த 6-ஆம் தேதி தனது பெரியப்பா முருகன் வீட்டில் 70 ரூபாயை யாருக்கும் தெரியாமல் எடுத்து செலவு செய்துள்ளார். இது பற்றி தாய் மணிமேகலைக்கு தெரியவரவே அன்று மாலையே சிறுமி மகாலட்சுமியை கண்டிக்க நெருப்பில் வரமிளகாயை போட்டு அந்த புகையை கட்டாயப்படுத்தி முகர வைத்துள்ளார்.
மேலும் வாயிலும் வலது தொடையிலும் சூடு வைத்துள்ளார். இச்சம்பவத்திற்கு சிறுமியின் அப்பா மற்றும் உறவினர்கள் உடந்தையாக இருந்துள்ளனர் என தெரியவந்துள்ளது. இதில் சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசமானதால் நேற்று முன்தினம் 8-ம் தேதி கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் உள் நோயாளியாக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் அரசு மருத்துவர்கள் சிறுமியை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டி தொடர் சிகிச்சை அளிக்கபட்டு வந்தது. தொடர்ந்து சிறுமியின் உடல்நிலையில் முன்னேற்றம் காணபடவில்லை இதனால் சிகிச்சை பலனின்றி நேற்று ( 9ம் தேதி) பரிதாபமாக உயிர் இழந்தார். தகவலறிந்த அரும்பாவூர் காவல்துறை இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியம் வழக்குப்பதிவு செய்து தாய் மணிமேகலை உறவினர் மல்லிகா ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமி செய்த குற்றத்திற்காக பெற்ற தாயே சூடு வைத்து சித்ரவதை செய்ததொடு கொடூரமாக மிளகாய்பொடியை புகைப்பிடிக்க செய்த சம்பவம் வேப்பந்தட்டை சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அருள்செல்வி கொடுத்த தகவலின்பேரில் பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் நல குழு தலைவரான வழக்கறிஞர் அய்யம்பெருமாள் தலைமையில் அதன் உறுப்பினர்களான டாக்டர் பழனிவேல் வழக்கறிஞர் சுரேஷ், அமுதா, விஜயந்தி ஆகியோர் கொண்ட குழுவினர் இன்று வேப்பந்தட்டை சென்று சிறுமியின் பெற்றோர், உறவினர்கள், அருகில் வசித்துவரும் மக்களிடம் நேரில் விசாரனையை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் இந்தசம்பவம் குறித்து குழந்தைகள் நல ஆலோசர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியது.. குழந்தைகள் சிறுவயதில் விளையாட்டுத்தனமாக தான் செயல்படுவார்கள். சிறுவயதில் எது தவறு, சரி என்று அவர்களால் யோசனை செய்யமுடியாது அதற்காக அவர்களுக்கு தண்டனை கொடுப்பது முற்றிலும் தவறு என்றார்கள்.மேலும் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு பணம் கொடுப்பது, அடிக்கடி கடையில் தின்பண்டம் வாங்கி கொடுத்து அவர்களை பழக்கப்படுத்திவிடுகிறார்கள்.
இந்நிலையில் குழந்தைகள் வீட்டில் பணம் இருப்பதை பார்த்து அதை எடுத்துக்கொண்டு தின்பண்டம் வாங்கி சாப்பிடுகிறார்கள், இந்த பழக்கத்திற்கு முற்றிலும் காரணம் பெற்றோர்கள்தான். குறிப்பாக இது போன்ற சிறிய தவறுக்கு பெற்ற தாயே தன் குழந்தையின் மீது கொடூரமாக நடந்துகொண்டது கண்டிக்கத்தக்கது என்றனர். பொற்றோர்கள் தங்களது குழந்தைக்கு எது சரி, தவறு என சொல்லிகொடுத்து வளர்க்க வேண்டும், குழந்தைகளுக்கு நன்கு விபரம் தெரியவரும் போது அவர்கள் புரிந்துக்கொள்வார்கள் அதைவிட்டு விட்டு இது போன்ற தவறான செயலில் யாரும் ஈடுபட கூடாது என்றனர்.