தமிழகத்தில் இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து கொரோனா 3 வது அலை வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில்  திருச்சி மாவட்டத்தில் இதுவரை 79863 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 77,808 நபர்கள் குணமடைந்து, 958 நபர்கள் தொடர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் 1104 நபர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் இதுவரை திருச்சி மாவட்டத்தில் மட்டும் 979 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று  தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளபட்டு வருகிறது. மேலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான அனைத்து மருத்துவ உபகரணங்களும், மருந்துகளும், மருத்துவ ஆக்சிஜனும் பாதுகாப்பு உபகரணங்களும் கையிருப்பில் உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். கொரோனா நோயாளிகளை தீவிரத் தன்மை கொண்டு அவர்களை வகைப்படுத்தி சிகிச்சைக்காக கொரோனா சிகிச்சை மையம் மற்றும் மருத்துவமனை பரிந்துறைப்பதாக 22 வகைப்படுத்துதல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக முதற்கட்டமாக பாரதிதாசன் பல்கலைக்கழகம் காலையில் 200 படுக்கைகளுடன் இன்று முதல் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் செயல்பட உள்ளது.




மேலும் திருச்சி  மாவட்டத்தில் உள்ள 14 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தற்காலிகக் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் செயல்பட உள்ளது. அறிகுறி இல்லாதவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. நோய் அறிகுறியுடன் உள்ளவர்கள் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் 5 நாள்கள் சிகிச்சைக்குப் பின் கண்காணிக்கப்படுவார்கள் என சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர். திருச்சி மாவட்டத்தில்  18 வயதிற்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை 21,86,100, இதில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 19,23,845, இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் 88 சதவீதம் ஆகும். இதேபோல் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 12,76,051, இதுவரை இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் 58 சதவீதம் ஆகும். மொத்தம் இதுவரை 31,99,896 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தபட்டுள்ளது.




இதனை தொடர்ந்து கொரோனா தடுப்பூசியை சிறார்களுக்கு செலுத்த திட்டமிட்டு நாடு முழுவது செலுத்தபட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் தடுப்பூசியை செலுதித்துக்கொள்ள தகுதியுடைய 15-18 வயதுக்கு உட்பட்ட சிறார்களின் எண்ணிக்கை 1,26,400 ஆகும். இதில் முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக்கொண்டவர்கள்  எண்ணிக்கை 1,01,980 ஆகும். இது தடுப்பூசி செலுத்தப்பட்ட  சதவீதம் 80.7 என அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும் கொரோனா 3 வது அலை தீவீரமாக பரவி வருவதால் திருச்சி மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசிகளையும் தவறாமல் செலுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், கைகளை அடிக்கடி கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் போன்ற செயல்களை மறக்காமல் கடைபிடிக்க வேண்டும். நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என மாவட்ட சுகாதார துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.