இந்தியாவில் ரயில் பயணிகளின் வசதியை மேம்படுத்த ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், விமானத்திற்கு நிகரான சொகுசு வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் கடந்த 2019-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. முதன் முதலாக டெல்லி - வாரணாசி இடையே இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சென்னையில் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள், நாடு முழுவதும் அடுத்தடுத்து கிடைத்த அதிக வரவேற்பின் காரணமாக பல்வேறு முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் சென்னை-மைசூர், சென்னை-கோவை இடையே தற்போது வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், தென் மாவட்டங்களுக்கு செல்லும் வகையில் வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதைத்தொடர்ந்து தற்போது சென்னை - நெல்லை இடையே வந்தே பாரத் ரயிலை இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்ததையடுத்து பணிகள் தொடங்கப்பட்டன. இந்தநிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இந்த ரயிலை பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்க இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இதற்காக 8 பெட்டிகளை கொண்ட வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் சென்னை-நெல்லை இடையே நடைபெற்றது. காலை 7.30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்ட இந்த ரயில் திருச்சிக்கு காலை 11.25 மணிக்கு சீறிப்பாய்ந்து வந்தது. 3-வது நடைமேடையில் நின்ற இந்த ரயிலை பார்த்ததும், அங்கு மற்ற ரயில்களுக்காக காத்திருந்த பயணிகள் மகிழ்ச்சியில் திளைத்தனர். பின்னர், வந்தே பாரத் ரெயில் முன் நின்று செல்பி எடுத்துக்கொண்டனர். 5 நிமிடங்கள் நின்ற அந்த ரயில் திருச்சியில் இருந்து 11.30 மணிக்கு நெல்லை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றது. சென்னையில் இருந்து திருச்சிக்கு 3 மணி நேரம் 55 நிமிடங்களில் அந்த ரயில் வந்துள்ளது. இதனால் பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த ரயில் நெல்லையில் இருந்து சென்னைக்கு செல்லும் வண்டி எண் 20632 என்றும், சென்னையில் இருந்து நெல்லைக்கு வரும் வண்டி எண் 20631 என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதற்கான டிக்கெட் முன்பதிவு அறிவிக்கப்படவில்லை. இன்று அல்லது நாளை டிக்கெட் முன்பதிவு அறிவிப்பு வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறிஉள்ளனர்.
மேலும் இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், சென்னையில் இருந்து 'வந்தே பாரத்' புதிய ரெயில் பெட்டிகளை நெல்லைக்கு சோதனை ஓட்டமாக இயக்கி வந்துள்ளோம். இந்த ரெயில் போக்குவரத்தை வருகிற 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த ரெயிலில் மொத்தம் 8 பெட்டிகள் உள்ளன. அதில் ஒரு பெட்டி எக்ஸ்கியூட்டிவ் பெட்டியாக உள்ளது. மொத்தம் 608 இருக்கைகள் உள்ளன. இந்த ரயிலை தற்போது 110 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி வந்தோம். தண்டவாளம் மேம்படுத்தப்பட்ட பிறகு 130 கிலோ மீட்டராக வேகம் அதிகரிக்கப்படும். இந்த ரயிலில் சிறப்பு அம்சங்களாக ரயில் நிலைய அறிவிப்புகள், இருக்கை சாய்வு வசதி, உணவு வழங்குதல், மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கு எளிதான வசதிகள் உள்ளன. என்ஜின் தனியாக கிடையாது என்பதால் அந்த பகுதியில் கூடுதல் பயணிகள் பயணம் செய்ய முடியும். 'வந்தே பாரத்' ரயில் செவ்வாய்க்கிழமைகளில் தவிர மற்ற 6 நாட்கள் இயக்கப்படும் என தெரிவித்தனர்.