தமிழ்நாடு முழுவதும் இன்று தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதனையொட்டி திருச்சி மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலுக்குரிய இறுதி வாக்காளர் பட்டியலினை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு வெளியிட்டார். பின்பு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட அனைத்து அலுவலர்கள் அதனை பெற்றுக் கொண்டனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான 3 நகராட்சிகள் மற்றும் 14 பேரூராட்சிகளின் 353 வார்டுகளில் நடைபெறவுள்ள தேர்தல்களுக்குரிய வாக்காளர் பட்டியல்கள் தொடர்புடைய நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் வாக்காளர் பதிவு அலுவலர் நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்களால் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்தார்.
அதன்படி, திருச்சி மாநகராட்சியில் 7,74,415 வாக்காளர்களும், துறையூர் நகராட்சியில் 27,881 வாக்காளர்களும், துவாகுடி நகராட்சியில் 28,870 வாக்காளர்களும், மணப்பாறை நகராட்சியில் 34,683 வாக்காளர்களும் உள்ளனர். பேரூராட்சியினை பொறுத்தவரை பாலகிருஷ்ணன்பட்டி பேரூராட்சி 7,700 வாக்காளர்களும், கள்ளக்குடி பேரூராட்சியல் 9,656 வாக்காளர்களும், காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் 9,332 வாக்காளர்களும், கூத்தப்பர் பேரூராட்சியில் 11,465வாக்காளர்களும், மணச்சநல்லூர் பேரூராட்சியல் 23,404 வாக்காளர்களும், மேட்டுப்பாளையம் பேரூராட்சியில் 6,724 வாக்காளர்களும், பொன்னம்பட்டி பேரூராட்சியில் 10,552 வாக்காளர்களும், புள்ளம்பாடி பேரூராட்சியில் 8,510 வாக்க்காளர்களும், பூவாளுர் பேரூராட்சியில் 7,097 வாக்காளர்களும், சிறுகமணி பேரூராட்சியில் 9,211 வாக்காளர்களும், எஸ்.கண்ணணுர் பேரூராட்சியில் 11,242 வாக்காளர்களும், த.பேட்டை பேரூராட்சியில் 11,202 வாக்காளர்களும், தொட்டியம் பேரூராட்சியில் 12,917 வாக்காளர்களும், உப்புலியபுரம் பேரூராட்சியில் 6,462 வாக்காளர்களும் என மொத்தம் இந்நகர்புற உள்ளாட்சி தேர்தல்களில் 4,89,847 ஆண் வாக்காளர்களும், 5,21,319 பெண் வாக்காளர்களும், 157 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 10,11,323 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
மேலும் நடைபெறவுள்ள நகராட்சி உள்ளாட்சி தேர்தல்களுக்கு 1205 எண்ணிக்கையிலான வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்தார். முன்னதாக கடந்த நவம்பர் 1ஆம் தேதி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கம் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் சிவராசு வெளியிட்டது குறிப்பிடதக்கது. மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்குதல் திருத்தம் ஆகியவற்றை மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் கடந்த 13 மற்றும் 14 மேலும் 27 மற்றும் 28 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேலும் இந்த சிறப்பு முகாமில் ஏராளமான இளைஞர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் இணைத்துக் கொண்டனர். மேலும் புதியதாக பெயர் சேர்த்தல் நீக்குதல் போன்ற நிகழ்வுகள் நடத்தப்பட்ட பின்னர் இறுதியாக இன்று நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் மாவட்ட ஆட்சியரால் வெளியிட்டார்.