திருச்சி மாவட்டம், வையம்பட்டி பகுதியில் பொன்னணியாறு அணை பகுதியில் இருந்து அரியாறு  துவங்கினாலும், திருச்சி அருகே உள்ள அரியாவூர் என்ற ஊரிலிருந்து தான் இந்த ஆறுக்கு அரியாறு என பெயரிட்டு அழைக்கப்படுகிறது. மணப்பாறை மாமுண்டி ஆறு, பள்ளிவெள்ளி மூக்குஒடை பகுதியில் இருந்து வரும் நீர் அரியாறு வழியாக புங்கனூர், தீரன்நகர் வழியாக கோரையாற்றில் இணைந்து குடமுருட்டி ஆறு வழியாக காவிரியில் கலக்கிறது. வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வந்ததால் அரியாற்றில் அதிகளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கடந்த நவம்பர் 28 ஆம் தேதி புங்கனூர்-அல்லித்துறை இணைப்பு பாலம் அருகே அரியாறு கரை உடைந்தது. இதனால் புங்கனூர்-தீரன்நகர் இடையே வெள்ளம் ஊருக்குள் புகுந்தது. இனியானூர், பிராட்டியூர் மேற்கு பகுதியில் உள்ள முருகன் நகர், வர்மா நகர் தெற்கு ஆகிய பகுதிகளில் இடுப்பளவு தண்ணீர் சூழ்ந்தது. திடீரென வீடுகளுக்குள் புகுந்த வெள்ளநீரால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் செய்வதறியாமல் தவித்தனர். வயல்வெளிகள் ஏரி போல காட்சியளித்தன. தண்ணீர் ஓரளவு வடிந்ததால் கரை உடைப்பு சரி செயும் பணி நடைபெற்று வந்தன.




இந்நிலையில் மணப்பாறை பகுதியில் நேற்று முன்தினம் காலை 3 மணி நேரத்தில் 27 செ.மீ., மழை கொட்டி தீர்த்ததால், மீண்டும் அரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அரியாறு கரையோர மக்களுக்கு திருச்சி கலெக்டர் சிவராசு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தார். நேற்று முன்தினம் காலை பெய்த மழைநீர் அரியாறு வழியாக நேற்று மாலை திருச்சி புங்கனூர் பகுதியை அடைந்தது. அரியாற்றில் மீண்டும் வெள்ளம் வந்ததால், புங்கனூர்-அல்லித்துறை அருகே கரை அடைத்த பகுதியில் மீண்டும் உடைத்து தண்ணீர் வெளியறியது. இந்நிலையில், நேற்று அதிகாலை அந்த இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவு மேல்புறம் அதே கரையில் 70 மீட்டர் தூரம் கரை உடைந்தது. இதனால் கூடுதல் தண்ணீர் வெளியேற துவங்கியது. இதனால் இனியானூர், புங்கனூர், தீரன்நகர், பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. திருச்சி-திண்டுக்கல் மாநில நெடுஞ்சாலையில் மீண்டும் வெள்ளம் பெருக்கெடுத்தது. மேலும் 100 ஏக்கருக்கும் மேற்பட்டவிலைநிலங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது. 500க்கும் மேற்ப்பட வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் அவதிபட்டு வருகிறார்கள்.




இந்நிலையில் திருச்சி, மணப்பாறை பகுதிகளில் நேற்று மழை இல்லாததால், அரியாற்றில் பெருக்கெடுத்து செல்லும் மழை வெள்ளம் இன்று மாலைக்குள் வடிந்துவிடும். வெள்ளநீர் வடிந்ததும் கரைகள் பலப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்படும் என அரியாறு வடிநிலக் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் திருச்சி புங்கனூர்-அல்லித்துறை இணைப்பு பாலம் அருகே அரியாறு ஆற்றில் கடந்த 28 ஆம் தேதி உடைப்பு ஏற்பட்டது. அந்த இடத்தில் சவுக்கு கட்டைகள் அடித்து மணல் மூட்டைகள் போட்டு அடைப்பு சரி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் முன்தினம் மணப்பாறையில் பெய்த மழையால் அரியாற்றில் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டு வலது கரையில் அடைக்கப்பட்ட பகுதியில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டது.


மேலும் அதே பகுதியில் மேல் பகுதியில் கரை உடைந்தது. தவிர, வலது கரையில் உடைபட்ட பகுதிக்கு நேர் எதிரே இடது கரை பகுதியில் இரண்டு இடங்களில் பாதி கரை அரித்துச்செல்லப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் சவுக்குக்கட்டை அடித்து மணல் மூட்டைகள் போட்டு அடைப்பு சரி செய்யப்பட்டுள்ளது. மற்றொரு இடத்தில் சவுக்குக்கட்டைகள் அடிக்கப்பட்டுள்ளது. மணல் மூட்டைகள் நிரப்பும் பணி நடந்து வருகிறது. வெள்ள்ம வடிந்த பின் மணல் மூட்டைகள் கொண்டு அந்த இடத்தில் அடைக்கும் பணி துவங்கும். மொத்தத்தில் அரியாறு இரண்டு கரைகளில் வலது கரையில் இரண்டு இடங்களில் உடைப்பும், இடது கரையில் இரண்டு இடங்களில் கரை அரிக்கப்பட்டு கரை பலவீனமாகவும் காணப்பட்டு வருகிறது இதற்க்கு முக்கிய காரணம் ஆக்கிரமிப்புகள், ஆகையால் திருச்சி மாவட்டத்தில் ஆக்கிரமிப்புகளை முற்றிலுமாக அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோல் அரியாறு சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிய பிறகு கரைகளை பல்படுத்தும் பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.