திருச்சி மத்திய மண்டலம் போதைப்பொருள் விற்பனை தலைநகரமாக மாறிவருகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா தொற்றால் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கை மாநில அரசு அமல்படுத்தியது. இந்நிலையில் மது பிரியர்களுக்கு மதுபானம் கிடைக்காமல் இருந்ததால் அவர்கள் போதைக்காக கஞ்சா, போதை ஊசி போன்றவற்றை பயன்படுத்த ஆரம்பித்தனர். ஆகையால் நாளடைவில் அதிக அளவில் கஞ்சா விற்பனை அதிகரித்தது. இதனால் கல்லூரி, பள்ளி மாணவர்களும் இந்த பழக்கத்திற்கு பெரும்பாலனோர் அடிமையாகினர், அதே சமயம் குற்ற சம்பவங்களும் அதிகரித்தது. போதை பொருட்களை முற்றிலுமாக தடுக்க மத்திய மண்டல காவல்துறை ஐ.ஜி. பாலகிருஷ்ணன் அனைத்து பகுதிகளிலும் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட உத்தரவிட்டார். இதனால் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை, கரூர் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் கண்காணிப்பை தீவிரபடுத்தி சட்டத்திற்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில் புதுக்கோட்டை நகர் பகுதிகளில் கஞ்சா விற்கப்படுவதாக வந்த தொடர் புகாரின்பேரில் திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர் உத்தரவின்பேரில் தனிப்படை காவல்துறையினர் கடந்த 2 மாதங்களாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில், கடந்த 2 மாதத்துக்கு முன் திருக்கோகர்ணம் ரோட்டில் கஞ்சா விற்ற ஜானகி என்பவரை கைது செய்து 140 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என தனிப்படை காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில், புதுக்கோட்டை நகர காவல் நிலைய எஸ்.ஐ. சந்திரசேகர்(58), திருப்புனவாசல் காவல் நிலைய ஏட்டு முத்துகுமார் (40) ஆகியோர் கஞ்சா விற்பனைக்கு உடந்தையாக இருந்ததும், புதுக்கோட்டை நகர போலீஸ் எஸ்.ஐ. அன்பழகன், இன்ஸ்பெக்டர் குருநாதன் ஆகியோருக்கும் கஞ்சா வியாபாரியுடன் தொடர்பு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து எஸ்.ஐ. சந்திரசேகர், ஏட்டு முத்துகுமார் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவண சுந்தர் நேற்று இரவு அதிரடி உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் குருநாதனுக்கு மெமோ கொடுக்கப்பட்டது. எஸ்.ஐ. அன்பழகனை அரிமளம் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்தவரிடம் தீவிர விசாரனையை மேற்க்கொண்டனர். இதில் கடந்த சில மாதங்களுக்கு முன் புதுக்கோட்டை நகர காவல்நிலையத்தில் பணியாற்றிய திருப்புனவாசல் காவலர் ஏட்டு முத்துகுமார், அங்கிருந்த போது 3 மாதங்களில் கஞ்சா வியாபாரி ஜானகியுடன் 1600 முறை போனில் பேசியது தெரிய வந்தது. இதேபோல் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.ஐ. இடமாற்றம் செய்யப்பட்ட எஸ்.ஐ. மெமோ கொடுக்கப்பட்ட இன்ஸ்பெக்டரும் கஞ்சா வியாபாரி ஜானகியுடன் போனில் தொடர்ந்து பேசியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆகையால் உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கபட்டதாக திருச்சி சரங்க காவல்துறை டி.ஐ.ஜி. சரவண சுந்தர் தெரிவித்தார்.