திருச்சி மாநகரில் மிக முக்கியமான இடங்களில் காந்தி மார்க்கெட் பகுதியாகும். இந்த காந்தி மார்க்கெட்டில் மொத்த விற்பனை, சில்லரை விற்பனை என காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான பொருட்களும் கிடைக்கும். ஆகையால் திருச்சி மக்கள் மட்டும் அல்லாமல் அருகில் இருக்ககூடிய கிராம மக்களும் இங்கு வந்து பொருட்களை வாங்கி செல்வார்கள். தினமும் அதிகாலையில் மக்கள் கூட்டம் அலைமோதும் அதேசமயம் போக்குவரத்து நெறிசலும் ஏற்படும் என்பதால் காவல்துறையினர் அதிக அளவில் பாதுக்காப்பு பணியில் ஈடுபட்டு வருவார்கள். இந்நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட் பிரதான வாயிலுக்கு முன்னதாக உள்ள டீக்கடையில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தீயானது மற்ற கடைகளுக்கும் பரவியது. உடனடியாக காந்தி மார்க்கெட் உள்ளே உள்ள 300க்கும் மேற்பட்ட கடைகளிலுள்ள வியாபாரிகள், பொதுமக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.




இதனை தொடர்ந்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கண்டோன்மெண்ட் பகுதியில் இருந்து 2 வாகனம் மூலம் 12 வீரர்கள் தீயை அணைக்க போராடினர். தீயானது தேநீர் கடை அருகில் உள்ள பலகார கடை உள்ளிட்ட 7 கடைகளுக்கு பரவியது. காந்தி மார்க்கெட் உள்ளே தீ பரவாமல் இருப்பதற்காக தீயணைப்பு வீரர்கள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மேலும் தீயானது வேகமாக பரவியதால் அருகில் உள்ள கடைகளில் இருந்தவர்கள் அச்சத்துடன் வெளியே ஓடினர். பின்பு கடைகளில் சிலிண்டர்கள் இருந்ததால் தீயை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் போராடினர். இதையெடுத்து காந்தி மார்க்கெட் பகுதியில் இருக்க கூடிய மக்கள் அனைவரையும் காவல்துறையினர் அப்பகுதியை விட்டு வெளியேற்றினர்.ழ்தொடர்ந்து ஒரு மணி நேரமாக போராடிய தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.மேலும் அருகில் இருந்த கடைகளில் இருந்த சிலிண்டரை பாதுக்காப்பாக அப்புறபடுத்தும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர். மேலும் உரிய நேரத்தில் தீயை அனைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கபட்டது.




திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் டீக்கடையில் பலகாரம் போட்டு கொண்டிருந்தவருக்கும், டீ சாப்பிட்டு கொண்டு இருந்த ஒருவருக்கும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்காக அவர்களி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். காந்தி மார்க்கெட் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் தேநீர் கடையில் மின்கசிவு காரணமாக அங்கு உள்ள சிலிண்டர்கள் எரிய துவங்கி உள்ளது. உடனடியாக அதிலிருந்த பத்துக்கும் மேற்பட்ட சிலிண்டர்களை பாதுகாப்பாக தீயணைப்பு வீரர்கள் வெளியே எடுத்தனர். 7 கடைகளிலுள்ள 25 லட்சம் மதிப்புள்ள பொருட்கள்  எரிந்து நாசமானதாக தகவல் தெரிவித்தனர். விபத்து குறித்து காந்தி மார்க்கெட் காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். காந்தி சந்தை உள்ளேயும் வெளியேயும் இதுவரை மூன்று முறை தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.