தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிலைகளை திருடி தொன்மையான சாமி சிலைகள் என கூறி ஏமாற்றி சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதாக சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சென்னை சிலை திருட்டு தடுப்பு பிரிவு டி.ஜி.பி. ஜெயந்த்முரளி, ஐ.ஜி. தினகரன் ஆகியோர் இது குறித்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட உத்தரவிட்டனர். இதையடுத்து திருச்சி சிலை திருட்டு தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் ராஜேஷ், பிரேமாசாந்தகுமாரி உள்ளிட்ட போலீசார் கோவைக்கு சென்று சிலை வாங்குபவர்கள் போல் செல்போனில் கேரளாவை சேர்ந்த ஒருவரிடம் பேசினர். பின்னர், அந்த நபரிடம் சிலையை கோவைக்கு கொண்டு வரும்படி கூறினர். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் அதிகாலை 5 மணி அளவில் கோவையில் இருந்து பல்லடம் செல்லும் மெயின்ரோட்டில் இருகூர் பிரிவில் போலீசார் காத்திருந்தனர்.




இந்நிலையில் அந்த வழியாக கேரளாவில் இருந்து வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த காரின் டிக்கியில் வெள்ளைநிற சாக்குப்பையில் சுருட்டிய நிலையில் சுமார் 3 அடி உயரமுள்ள திருவாச்சியுடன் கூடிய நடராஜர் உலோகச்சிலை மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து காரில் வந்த கேரளாவை சேர்ந்த நம்பூதிரி சிவபிரசாத் (வயது 53), டிரைவர் ஜெயந்த் (22) ஆகியோரிடம் விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதையடுத்து அந்த சிலையை கேரளாவில் இருந்து கோவை வழியாக வெளிநாட்டிற்கு கடத்த முயன்றது தெரியவந்தது. உடனே காருடன் சிலையை பறிமுதல் செய்த போலீசார், சிலை கடத்தி வந்த 2 பேரையும் கைது செய்தனர். இந்த சிலையின் மதிப்பு சுமார் ரூ.10 கோடி இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து  கைது செய்யப்பட்ட 2 பேரையும் திருச்சி சிலை திருட்டு தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு அழைத்து வந்து அது ஐம்பொன் சிலையா?, அந்த சிலை எந்த கோயிலுக்கு சொந்தமானது, சிலை எந்த காலத்தில் உருவாக்கப்பட்டது. மேலும், கடத்தப்பட்ட சிலை குறித்து ஏதேனும் வழக்கு நிலுவையில் உள்ளனவா? என தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சிலை திருட்டு தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன் கூறினார்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.