திருச்சி சிந்தாமணி, பூசாரி தெருவை சேர்ந்த உதயகுமார். இவர் பெங்களூரில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், உதயகுமார் கோவாவிற்கு சுற்றுலா சென்று உள்ளார். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கோவாவிற்கு சென்று சுற்றுலா முடிந்த பின்பு திருச்சிக்கு உதயகுமார் திரும்பி உள்ளார்.


கோவாவிற்கு சுற்றுலா:


இந்நிலையில் கோவாவில் இருந்து திருச்சி திரும்பிய உதயகுமாருக்கு கடும் வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, திருச்சி பாபு ரோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.


அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. கொரனா தொற்று உறுதி உறுதி செய்வதற்கு முன்பே அவர் இன்று காலை இறந்துவிட்டார். இதையடுத்து, அவரது உறவினர்கள் பெரும் சோகம் அடைந்தனர். இந்த நிலையில், இன்று மதியத்திற்கு மேல் கொரோனா பரிசோதனை முடிவுகள் வந்தது. அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 


கொரோனா உறுதி:


மேலும், இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் கூறுகையில், பெங்களூருவில் பணியாற்றும் உதயகுமார் சுற்றுலா செல்வதற்காக கோவா சென்று அங்கு உடல் உபாதை காரணமாக திருச்சி தனியார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவருடன் சுற்றுலா சென்ற குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களுக்கு எந்தவித கொரோனா அறிகுறியும்  இல்லை. மேலும் அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.