புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு, மாங்காடு, புள்ளான்விடுதி, நெடுவாசல், கறம்பக்குடி, கீரமங்கலம், கொத்தமங்கலம், அறந்தாங்கி, மறமடக்கி, ஆலங்குடி உள்ளிட்ட சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, உயர் கல்வி பயில தினமும் மாணவ-மாணவிகள் 40 முதல் 50 கிலோ மீட்டர் தூரம் வரை பயணித்து, மாவட்ட தலைநகர் பகுதிகளில் இருக்கும் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கல்வி பயின்று வர வேண்டிய சூழல் நிலவி வந்தது. இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர். பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில், அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைப்பதற்கான அறிவிப்பாணை அறிவிக்கப்பட்டு ஆலங்குடி தொகுதியில் வடகாடு அருகேயுள்ள கீழாத்தூர் பகுதியில் உள்ள சுமார் 10 ஏக்கர் இடம் தமிழக அரசால் கடந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டது. மேலும் ஆலங்குடியில் தற்காலிகமாக அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவ-மாணவிகளின் சேர்க்கை கூட நடைபெற்று தற்சமயம் வகுப்புகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அரசு கலை, அறிவியல் கல்லூரி கட்ட தேர்வு செய்யப்பட்ட கீழாத்தூர் பகுதியில் இதுவரை எந்தவித கட்டுமான பணிகளும் தொடங்கப்பட இல்லை. இதற்கான பணிகள் எப்போது தொடங்கப்படுமோ? என தெரியாமல் இப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.






மேலும் இதுக்குறித்து வடகாடு பகுதியை சேர்ந்த முன்னாள் கல்லூரி மாணவர் ஒருவர் கூறும்போது..  நாங்கள் படிக்கும் போது தான் அலைந்து திரிந்து கல்வி பயில வேண்டிய நிலை இருந்து வந்தது. இனிமேலாவது இப்பகுதி மாணவர்களின் நலன் கருதி கீழாத்தூரில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்கும் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்றார். இதனை தொடர்ந்து கீழாத்தூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கருத்து.. ஆலங்குடி பகுதியில் தற்காலிக அரசு கலை, அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டு அதற்கான வகுப்புகள் நடந்து வந்தாலும், இடப்பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளால் மாணவர்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். அரசு கலை, அறிவியல் கல்லூரி தேர்வு செய்யப்பட்டதற்கான இடத்தில் இப்போதைக்கு கட்டிடங்கள் கட்ட பணிகள் தொடங்கினாலும் அத்தகைய பணிகள் நடந்து முடிய எத்தனை ஆண்டுகள் ஆகுமோ?. அதற்கு உரிய பணிகள் இன்னும் நடைபெறாமல் இருப்பது வருத்தமளிப்பதாக உள்ளது என்றனர். 




இதனை தொடர்ந்து கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கருத்து, "எங்கள் ஊர் அருகேயுள்ள கீழாத்தூர் பகுதியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைய இருப்பது மகிழ்ச்சியான செய்தி தான். ஆனால் கல்லூரி கட்டிடங்கள் கட்டுமான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும்" என்றார். இந்த பகுதியில் கல்லூரி கட்டினால் பல ஆயிரம் மாணவ, மாணவிகள் பயன்பெறுவார்கள். குறிப்பாக சுற்றியுள்ள கிராம பகுதி ஏழை, எளிய மக்களின் பிள்ளைகள் நீண்ட தூரம் சென்று கல்வி பயிலும் நிலைமை உள்ளது. ஆகையால் இந்த திட்டத்தை கிடப்பில் போடாமல் ,  தற்போது நடபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரின் போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தினை பற்றி விவாதம் செய்தி உடனடியாக கல்லூரி அமைக்கும் பணிகள் தொடங்க உத்தரவிடும்படி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ள்னர்.