திருச்சி மாநகராட்சியில் கடந்த 2011 ஆண்டு மக்கள் தொகை கணக்கீட்டின்படி 9,15,569  மக்கள் வசித்து வந்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முந்தைய கணக்கெடுப்பின் படி ( 2020 ம் ஆண்டு ) 10,45,436 மக்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் சுமார் 11 லட்சத்திற்கும் அதிகமாக மக்கள் தொகை இருக்கும் என ஆய்வறிக்கை கூறுகிறது. இதில் திறந்தவெளி கழிப்பிடங்கள் இருக்கக் கூடாது என்பதற்காக மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட 65 வார்டுகள் மற்றும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் பயணிகளின் பயன்பாட்டிற்காக பொது கழிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சமுதாய கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சமுதாய கழிப்பிடங்களை பராமரிக்க கிராமாலயா, மகளிர் சுய உதவிக் குழு, மற்றும் தனியார் தொண்டு அமைப்பினரிடம் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பொது கழிப்பிடத்தை பராமரிக்க ஒப்பந்த அடிப்படையில் பொது ஏலம் மூலம் விடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி திருச்சி மாநகராட்சியில் பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் அதன் சுற்றுப்பகுதிகளில் 46 பொது கழிப்பிடம், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 368 கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் பொது கழிப்பிடங்களில் கழிவறைக்கு ரூ.5, சிறுநீர் கழிக்க ரூ.2 மற்றும் குளிப்பதற்கு ரூ.10 வசூலிக்கப்படுகிறது. அதே போல் சமுதாய கழிப்பிடத்தில் கழிவறைக்கு ரூ.2 , குளிப்பதற்கு ரூ 5, வசூலிக்கப்பட்டு வருகிறது. இதற்கான கட்டணங்களை மாநகராட்சிக்கு ஒப்பந்தம் எடுத்தவர்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினர் செலுத்தி வருகின்றனர். 




இந்நிலையில் தமிழக அரசின் பொது சுகாதாரத் துறையினர் அனைத்து மக்களின் நலன் பேணிக்காக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அவற்றில் கழிப்பிடங்கள் சுகாதாரமாகவும் பொது நலன்களை பேணிக்காக்கும் வகையில் இருப்பதை உறுதி செய்யும் வகையில் பொது கழிப்பிடம் மற்றும் சமுதாய கழிப்பிடங்களின் முகப்பு பகுதிகளில் சுவரொட்டியில் க்யூ ஆர் கோடு அமைத்து அதன் மூலம்  கழிப்பிடத்தில் அடிப்படை வசதிகள் குறித்த புகார்களை தெரிவிக்கும் வகையில் அமைத்துள்ளனர். 




பொதுமக்கள் தங்களின் செல்போனில் இந்த க்யூ ஆர் கோடு மூலம் புகார் அளிக்கும்போது அதில் 1- கழிப்பறை சுத்தமாகவும், பயன்படுத்தும் நிலையிலும் உள்ளதா?, 2- கை கழுவும் இடம் சுத்தமாகவும் பயன்படுத்தும் நிலையிலும் உள்ளதா?, 3- தண்ணீர் வசதி உள்ளதா?, 4- போதுமான காற்றோட்ட வசதி உள்ளதா?, 5- கழிப்பறையின் உள்ளேயும், வெளியேயும் போதுமான வெளிச்சம் உள்ளதா?, 6- கழிப்பறை கதவுகளில் தாழ்ப்பாண் சரியான முறையில் பொருத்தப்பட்டுள்ளதா?, 7- கழிப்பறையில் துர்நாற்றம் உள்ளதா?, என்பது போன்ற 7 கேள்விகள் கேட்கப்படும். இதில் எந்த குறை உள்ளது என்பதை பொதுமக்கள் தேர்வு செய்து அனுப்ப வேண்டும். இதனை மாநகராட்சியில் உள்ள தொழில்நுட்ப பிரிவினர் பொது சுகாதார அலுவலகளுக்கு  அனுப்பி வைக்கின்றனர்.  பொது சுகாதார துறையினர் இந்த புகாரை மாநகராட்சி கமிஷனருக்கு அனுப்பி வைக்கின்றனர். உடனடியாக கமிஷனரின் உத்தரவின் பேரில் புகார் பெறப்பட்ட கழிப்பறைக்கு செல்லும் சுகாதார பணியாளர்கள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கின்றனர். தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத் துறையினரின் இந்த க்யூ ஆர் கோடு புகார் குறித்த சுவரொட்டி மாநகரில் உள்ள 46 பொது கழிப்பிடம், 368 சமுதாய கழிப்பிடம் என மொத்தம் 404 கழிப்பிடத்தில் பொதுமக்கள் பார்வையில் படும்படியாக ஒட்டி வைத்து அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.