தைப்பூசத்தை முன்னிட்டு விசுவ இந்து பரிசத் அமைப்பினர் அகில இந்திய செயலாளர் சானுமலைஜி தலைமையில் இன்று காவிரி படித்துறைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் பால் குடம், காவடி, வேல் மற்றும் அனுமன் கொடியுடன் பாத யாத்திரையாக வயலூர் முருகன் கோவிலுக்கு புறப்பட்டனர். அப்போது அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்த ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆணையர் நிவேதா லட்சுமி தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார். பின்னர் போலீசார் அவர்களிடம் கொடியேந்தி சொல்ல அனுமதிக்க இயலாது என கூறினர். இதனால் இரு தரப்பிற்கும் இடையே தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது விசுவ இந்து பரிஷத் அகில இந்திய செயலாளர் சானுமலைஜி, "நமது நாட்டில் அனைவருக்கும் அவர்களது மத உரிமைக்கும், வழிபாட்டிற்கும் அனுமதி உண்டு. எனவே பாத யாத்திரை செல்ல எங்களுக்கு உரிமை உண்டு. நீங்கள் அனுமதி தரவில்லை என்றால் இதனை தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவிலான பிரச்சினையாக எடுத்து சொல்வோம்.
விசுவ இந்து பரிஷத் சேதுராமன், கடந்த 35 வருடமாக இந்த பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறோம். 5 பால் குடங்களுடன் 21 பேர் மட்டுமே செல்கிறோம். நாங்கள் கையில் அரிவாள், கத்தி போன்ற பொருட்களை எடுத்துச் செல்லவில்லை. பால் குடங்கள் மட்டும்தான் எடுத்து செல்கிறோம். பிற கோவிலுக்கு பாதயாத்திரை செல்பவர்கள் உங்களிடம் அனுமதி பெற்று தான் செல்கிறார்களா? இல்லை என்றால் தமிழகத்தில் இனிமேல் பாதயாத்திரை செல்ல அனுமதி வாங்கவேண்டும் என்ற நிலை வருமா? எங்களுக்கு அனுமதி மறுத்து எங்களை கைது செய்தால் நாங்க கைதாக தயார். ஆனால் சாப்பிடமாட்டோம்" என்றார்.
இதனை தொடர்ந்து பா.ஜ.க. மாவட்ட தலைவர் ராஜசேகர் கூறுகையில், "சாமி கும்பிடுவதற்கு எதற்காக போலீசார் அனுமதி வாங்க வேண்டும். இதற்கு முன்பு இந்த நடைமுறை இல்லையே" என்றார். அதற்கு போலீசார் உயரதிகளிடம் கேட்டிருக்கிறோம், சிறிது நேரம் பொறுத்திருங்கள் சொல்கிறோம் என்றனர். பின்னர் தொடர்ந்து காலதாமதமானதால் ஆத்திரமடைந்த விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் தொடர்ந்து அம்மா மண்டபம் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் கொடிகள் இல்லாமல் பாதயாத்திரைக்கு செல்லவும், நடுவில் ஏதும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க வயலூர் வரை போலீசார் பாதுகாப்புக்கு வருவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து அனைவரும் பாதயாத்திரையாக புறப்பட்டு சென்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்