திருச்சி உச்சிபிள்ளையார் கோவில் சிறப்பு :


திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில் மலை, மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டு, மலையின் கீழ்ப்பகுதியில் மாணிக்க விநாயகர் தரிசனம் தருகின்றார். மலையின் நடுபகுதியில் தாயுமானவர் சுவாமிகள் தரிசனம் தருகின்றார். மலையின் உச்சியில் இருக்கும் பிள்ளையார் உச்சிப்பிள்ளையாராக காட்சியளிக்கின்றார்.






இதைத்தவிர பல்லவர் காலத்து குடைவரை கோயில்கள் பல ஆயிரம் நூற்றாண்டுகள் கழித்தும் இன்றும் அழியாமல் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது. இந்த மலையானது சுமார் 3400 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. தமிழ்நாட்டின் தென் கைலாயம் என்ற பெயரும் இதற்கு உண்டு. மூன்று தலைகளை கொண்ட அசுர அரசன் இந்தப் பகுதியை ஆண்ட போது திரிசிரபுரம் என்று அழைக்கப்பட்டு பின்பு சிராப்பள்ளி என்று மாறி தற்சமயம் திருச்சிராப்பள்ளி என்று அழைக்கப்பட்டு வருகிறது.




இக்கோவிலில் பங்குனி மாதம் 3 நாட்கள் மாலையில் சிவலிங்கம் மீது, சூரிய ஒளி விழுகிறது. இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 69 வது தேவாரத்தலம் ஆகும்.


மலைக்கோட்டை உச்சியில் உச்சி விநாயகரும், மலையின் நடு பகுதியில் தாயுமானசுவாமி மட்டுவார் குழலம்மையும், மலையின் கீழ் பகுதியில் மாணிக்க விநாயகரும் எழுந்தருளியிருப்பது மிக சிறப்பு. பொதுவாக சமதரை அமைப்பிலேயே உள்ள திருச்சி மாநகரின் மத்தியில் சுமார் 83 மீட்டர் உயரமான இம்மலை அமைந்திருப்பது இயற்கையின் சிறப்பாகும்.


மிகப் பழமையான மலைகளுள் ஒன்றான இது, ஏறத்தாழ 3400 மில்லியன் வருடங்கள் பழமையானதாகக் கணக்கிடப்படுகிறது.


உச்சிப்பிள்ளையார் கோவிலில் சித்திரை தேர் திருவிழா 


திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் சித்திரைத் தேரோட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர். மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் சித்திரைத் திருவிழா கடந்த மாதம் 14 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் சுவாமி அம்பாளுக்கு பகலில் சிறப்பு அபிஷேகமும், இரவில் சிறப்பு அலங்காரத்துடன் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலாவும் நடைபெற்று வருகிறது.


9-ஆம் நாளான இன்று அதிகாலை 4.30 மணிக்கு மேல் மேஷ லக்னத்தில் சுவாமி-அம்பாள் கோயிலில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடாகி மலைக்கோட்டை உள் வீதி வழியாக 5.40 மணிக்கு தாயுமான சுவாமி உடனுறை மட்டுவார் குழலம்மை பெரிய தேரிலும், தாயார் சிறிய தேரிலும் எழுந்தருளினர்




பின்னர் 6.10 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த தேரோட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இதையடுத்து பஞ்சமூர்த்திகள் புறப்பாடு சிறிய சப்பரத்திலும், யானை லட்சுமியும் முன்னே செல்ல, பெரிய தேரையும், சிறிய தேரையும் பக்தர்கள் சிவ சிவா என்ற முழக்கத்துடன் வடம் பிடித்து இழுத்து சென்றனர்.


இதில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் வெகு விமரிசையாக தேரோட்டம் நடைபெற்றது. தேர் செல்லும் பாதைகளில் ஆங்காங்கே பக்தர்களுக்கு பாலும், குளிர்பானங்களும், அன்னதானமும் வழங்கப்பட்டது. மேலும் பாதுகாப்பு பணியில் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட்டனர்.