திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக வருண்குமார் பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக பொதுமக்கள் புகார் தெரிவிப்பதற்கு தொலைபேசி எண் அறிவித்து, அதனை 24 மணி நேரமும் கண்காணிக்க காவல்துறையில் குழு அமைத்து தீவிரமாக செயலாற்றி வருகிறார். 


பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக வழிப்பறி, திருட்டு ,கொலை சம்பவங்களில் ஈடுபடுவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டுமென காவல்துறையினருக்கு எஸ்.பி. வருண்குமார் உத்தரவிட்டுள்ளார். அதே சமயம் தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர்களை கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தெரிவித்துள்ளார்.


குறிப்பாக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை, கள்ளச்சாராயம் விற்பனை உள்ளிட்டவற்றை உடனடியாக தடுக்க வேண்டும் என தனிப்படைகள் அமைத்து அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.




பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் தொடர் திருட்டு, கொலை சம்பவங்கள் நடைபெற்றாலோ அல்லது காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க விட்டாலோ நேரடியாக புகார் தெரிவிக்கலாம் என எஸ்பி. வருண்குமார் தெரிவித்துள்ளார்.


திருச்சி மாவட்டத்தில் அதிகமாக குற்றம் சம்பவங்கள் நடக்கும் பகுதிகளை கண்டறிந்து 24 மணி நேரமும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேசமயம் அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தும் நடவடிக்கையை தீவிரப் படுத்தி உள்ளனர்.


பொதுமக்கள் அச்சம் படாமல் தங்கள் பகுதிகளில் சந்தேகம் படும்படியாக நபர்கள் சுற்றித்திரிந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு புகார் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.


மேலும் லாட்டரி சீட்டு ,விற்பனை கஞ்சா விற்பனை, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகளில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். குறிப்பாக சரித்திர பதிவேடுகளில் இருக்கும் குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணித்து அவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட முயற்சி செய்தாலே உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.




திருச்சி மாவட்டத்தில் தொடர் திருட்டு, கொலை ,பொதுமக்களை அச்சுறுத்தும் விதமான செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இந்நிலையில் திருச்சி மாவட்டம், துறையூர் சௌடாம்பிகா தெருவில் ஜவுளி கடை வைத்திருப்பவர் முத்துவீரன் நேற்று காலை 05:39 மணி அளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் வந்த 5 டிப்டாப் ஆசாமிகள் முத்துவீரன் வீட்டில் சோதனையிட்டுள்ளனர். 


பின்னர் பீரோவில் வைத்திருந்த ரொக்கம் ஐந்து லட்சம் மற்றும் ஐந்து சவரன் நகையை எடுத்து சென்றனர். இதனால் சந்தேகம் அடைந்த முத்துவீரன்  இதுகுறித்து துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில்,  வருமானவரித்துறை அதிகாரிகள் போல் வீட்டிற்கு வந்தவர்கள் திருடர்கள் என தெரிய வந்தது.


மேலும், இதுகுறித்து துறையூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர். சினிமா பட காட்சி போல், நடைபெற்ற திருட்டு சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.