தமிழ்நாட்டில் கந்துவட்டி கொடுமை தொடர்பாக, வந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். மேலும், ஆபரேஷன் கந்துவட்டி , நடவடிக்கை மூலம் கந்துவட்டி தொடர்பான அனைத்து வழக்குகளையும் உடனடியாக விசாரிக்க வேண்டும், நிலுவையில் உள்ள வழக்குகளையும் உடனடியாக விசாரித்து, தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் டிஜிபி சைலேந்திர பாபு சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். அந்த சுற்றறிக்கையில், கந்துவட்டி தொடர்பாக காவல்நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கந்துவட்டிகாரர்களின் இருப்பிடங்களை உடனடியாக சோதித்து, கையெழுத்துப் பெற்ற காகிதங்கள், சட்ட விரோதமான ஆவணங்கள், தொகை குறிப்பிடப்படாத காசோலைகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்ய வேண்டும். கந்துவட்டி வசூலிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கபட்டு இருந்தது. 




இதனை தொடர்ந்து திருச்சி மத்திய மண்டல புதிய ஐ.ஜி. சந்தோஷ்குமார் செய்தியாளர்களின் சந்திப்பில் தெரிவிக்கையில், “காவல் துறை இயக்குனரின் உத்தரவின் பேரில் கந்துவட்டியால் மக்களின் உயிரிழப்பை தடுப்பதற்கும் இதனால் அப்பாவி பொதுமக்கள் மூலம் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு ஆபரேசன் கந்துவட்டி என்ற சிறப்பு திட்டம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கந்துவட்டி சம்பந்தமாக வரும் புகார்களுக்கு உடனடியாக துரித நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 2021-ல் மத்திய மண்டலத்திற்குட்பட்ட 2 மாவட்டங்களில் கந்துவட்டி வசூல் தொடர்பாக 77 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன், 116 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 39 வீடுகளில் சோதனை செய்யப்பட்டு சொத்துப் பத்திரங்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



நடப்பு ஆண்டில் இது வரையில் கந்துவட்டி தொடர்பான 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 9 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மேலும் பொது மக்களை ஏமாற்றிய நபர்களின் வீட்டில் சோதனை மேற்கொண்டு அவர்களிடமிருந்து பெறப்பட்ட வெற்று ஆவணங்கள் மற்றும் சொத்து பத்திரங்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும் கைது செய்யப்படாத குற்றவாளிகளை உடனடியாக கைது செய்வதற்கும், கந்துவட்டி சம்பந்தமான குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளின் வீடுகளில் சோதனை செய்வதற்கும் துரிதமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கந்துவட்டி புகார்கள் எவர் மீதேனும் வந்தால் சட்டப்படியாக துரிதமாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண