திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது சிறுகனூர் ஊராட்சி. இங்கு ஆயிரத்து 800-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் சிறுகனூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும். தற்போது சிறுகனூர் கிராமத்தில் தச்சங்குறிச்சி பிரிவு ரோடு முதல் லால்குடி செல்லும் சாலையில் மேம்பாலம் அமைத்து வருகின்றனர். சிறுகனூரில் தேசிய நெடுஞ்சாலைக்கு கிழக்கு பகுதி மற்றும் மேற்கு பகுதியில் வசிக்கும் பொது மக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளி செல்வதற்கு தற்போது அமைத்து வரும் மேம்பாலம் சென்று மீண்டும் பள்ளி செல்ல சுமார் 1½ கிலோ மீட்டர் தூரம் சென்று சாலையை கடக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால், சிறுகனூர் கிராமத்திற்கு அருகில் கிழக்குப் பகுதி உள்ள கிராமங்களான ரெட்டிமாங்குடி, கொளக்குடி, பெருவளப்பூர் ஆகிய கிராமங்களில் உள்ள பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் வங்கி ஊழியர்கள் மின்துறை ஊழியர்கள் விவசாய தொழிலாளர்கள் மேற்கு பகுதியில் உள்ள கிராமங்களான சி.ஆர். பாளையம், திருப்பட்டூர், எம்.ஆர்.பாளையம் சனமங்கலம், பாலையூர் ஆகிய கிராமங்களில் உள்ள பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். சுமார் 1½ கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல நீண்டநேரம் ஆவதால் சிலர் சாலையை கடக்க முயன்று விபத்தில் சிக்குகிறார்கள். தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் கிராமத்தில் பழைய பஸ் நிறுத்தத்தில் எந்த ஒரு வழித்தடம் கூட சாலையின் நடுவில் இதுவரை அமைக்கவில்லை என்றனர்.




இதுகுறித்து பொதுமக்களிடம் கேட்டபோது, பொதுமக்களின் நலன் கருதி, அப்பகுதியில் தரைப்பாலம் அமைத்து தர வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவர் இந்திராணி கண்ணன் தலைமையில் பொதுமக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமாரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இங்கு தரைப் பாலம் அமைத்தால் விபத்துகளினால் ஏற்படும் உயிர்சேதம் தவிர்க்கப்படும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சிறுகனூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இரவு, பகல் என 24 மணி நேரமும் வாகனங்கள் சென்று வருகின்றன. சாலையை கடப்பதில் சிரமம் உள்ளது. எனவே சிறுகனூர் பழைய பேருந்து நிறுத்தம் அருகே தரைப்பாலம் அமைத்துக்கொடுக்க வேண்டும் என்றனர். மேலும் சிறுகனூர் மெயின் ரோட்டில் பல தனியார் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக பீகார், உத்தரபிரதேசம் போன்ற வட மாநிலங்களைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் ஏராளமானவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது அமைத்து வரும் பாலம் அருகே இருந்து நடந்து வரும் பொழுது விரும்பத்தகாத சம்பவங்களும் தேவையற்ற அசம்பாவிதங்களும் நடக்க வாய்ப்பு உள்ளது. மேலும் இங்கிருந்து திருப்பட்டூர் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கும் மிகுந்த சிரமமாக உள்ளது.எனவே சிறுகனூர் பஸ் நிறுத்தம் அருகே தரைப்பாலம் அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானதுதான் அதை செயல்படுத்துவதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் வாகன ஓட்டிகளிடம் கேட்டபோது, சிறுகனூரில் எங்களது உறவினர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்களை பார்ப்பதற்காக அடிக்கடி சிறுகனூருக்கு வருவோம். மேலும் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலுக்கு செல்வோம். தற்பொழுது 1½ கிலோ மீட்டர் தூரத்தில் பாலம் அமைத்து வருகிறார்கள். நாங்கள் பஸ்சை விட்டு இறங்கி 1½ கிலோ மீட்டர் தூரம் நடந்து அதன்பிறகு திருப்பட்டூர் செல்ல சாலையை கடப்பதற்கு அச்சமாக உள்ளது. எனவே பழைய பஸ் நிறுத்தம் அருகே தரைப்பாலம் அமைத்து தர வேண்டும். மேலும் சிறுகனூரைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான பேர் பல்வேறு பணிகளுக்காக இங்கு வந்து செல்கின்றோம். 1½ கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்வதால் நேரம் வீணாகிறது. குறிப்பிட்ட நேரத்திற்குள் நாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாமல் போய்விடுகிறது. மேலும் விபத்துகளும் அடிக்கடி ஏற்படுவதால் அச்சம் ஏற்பட்டுள்ளது.எனவே சிறுகனூர் பழைய பேருந்து  நிறுத்தம் அருகே தரைப்பாலம் அமைத்து தரவேண்டும் என்றனர். மேலும் விபத்துக்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.