நாடாளுமன்ற - 2024 தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் திருச்சி மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக நான்கு சக்கர வாகனங்களை முழுமையாக சோதனை செய்து வருகிறார்கள். 


இந்நிலையில் 24 மணி நேரமும் காவல்துறையினர், தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பெரமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் சக்திவேல் த- பெ பெரியசாமி கீரிப்பட்டி என்ற முகவரியைச் சேர்ந்த நபரிடமிருந்து  உரிய அனுமதியின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.3,10,000 கைப்பற்றப்பட்டுள்ளது. அதேபோல் திருச்சி மேற்கு பகுதியில் உரிய ஆவணம் இல்லாமல் வைத்து இருந்த ரூ 3,26,570 பணம் பறிமுதல் செய்யபட்டது. இதனை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் நேற்று முதல் இன்று காலை மொத்தம் ரூ 13,45,730 பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.




திருச்சி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை கண்காணித்திடும் பொருட்டு 81 பறக்கும் படைகள்,  81 நிலையான கண்காணிப்பு குழுக்கள்,  9 வீடியோ நிலையான கண்காணிப்பு குழுக்கள், வேட்பாளர்களால் தேர்தலுக்காக செலவிடப்படும் தொகையினை கண்காணித்திட 9 செலவு கண்காணிப்பு குழு, அதற்கு துணையாக 9 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பான புகார்களை 1800 599 5669 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். மேலும் புகார்களை 6384001585 என்ற whatsapp எண்ணிலும் தெரிவிக்கலாம். அனைத்து புகார்கள் மீதும் 24 மணி நேரத்திற்குள் தீர்வு மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார்.




அதன் அடிப்படையில் திருச்சி மாநகரத்தில் அரியமங்கலம், பஞ்சப்பூர், ராமச்சந்திரா நகர், குழுமணி சாலை, மாம்பழச் சாலை, ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் உள்ளிட்ட பகுதிகளிலும், மாவட்டத்தில் நம்பர் ஒன் டோல்கேட்,  ராம்ஜி நகர், பெட்டவாய்த்தலை, துவாக்குடி, துவரங்குறிச்சி, மணப்பாறை உள்ளிட்ட பகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.


திருச்சி மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி) வருண்குமார் தலைமையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் 3பேர், துணை காவல் கண்காணிப்பாளர் 8பேர், காவல் ஆய்வாளர்கள் 36பேர்,  உதவி காவல் ஆய்வாளர்கள் 263 பேர், போலீசார் ஆயிரத்து 424 பேர் மற்றும் ஊர்க்காவல் படையினர் 383 பேர் என மொத்தம் இரண்டாயிரத்து 118 பேர் ஈடுபட்டுள்ளனர். மேலும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில், ஒரு துணை காவல் கண்காணிப்பாளர், ஒரு காவல் ஆய்வாளர்கள்,  உதவி காவல் ஆய்வாளர்கள் 4பேர், போலீசார் என மொத்தம் 14 பேர் பணியில் உள்ளனர். மேலும், தேசிய மாணவர் படை, தேசிய நாட்டு நலப்பணித் திட்டம் மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் ஓய்வு பெற்ற போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.