திருச்சி மாநகர பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகளில் தினமும் ஏராளமான பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். குறிப்பாக பீக்அவர்ஸ் என்று சொல்லக்கூடிய காலை 8 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் மாநகர பேருந்துகளில் கூட்டம் அலைமோதும். அந்தநேரங்களில் பெரும்பாலும் பேருந்துகளில் அமர்ந்து செல்வதற்கு இடம் கிடைக்காது. பேருந்துகளில் நின்றபடி தான் பயணம் மேற்கொள்வார்கள். கூட்ட நெரிசலை பயன்படுத்தி பேருந்து பயணிகளிடம் பிக்பாக்கெட் அடிப்பது முன்பெல்லாம் சர்வசாதாரணமாக நடைபெற்றது. பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்ய ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் பிக்பாக்கெட் திருடர்களின் புகைப்படங்களை ஒட்டி வைத்து இருப்பார்கள். ஆனால் சமீபகாலமாக ஓடும் பேருந்துகளில் செல்போன், நகைகள் திருட்டுக்கள் அதிகமாக நடக்கிறது. இதற்கு பயணிகளின் அஜராக்கிரதையே முக்கிய காரணம் என கூறப்பட்டாலும், சட்டை, பேண்ட் பாக்கெட்டுகளில் வைத்திருக்கும் செல்போன்களை லாவகமாக எடுப்பதற்கென்றே மர்ம நபர்கள் பேருந்துகளில் பயணிகள் போல் பயணம் செய்வதும் உண்டு. பேருந்தில் கூட்டம் அதிகமாக இருக்கும்போது, பைகளில் வைத்திருக்கும் செல்போனை நைசாக திருடி கொண்டு அடுத்த நிறுத்தத்திலேயே இறங்கி சென்று விடுவார்கள். இன்றைய காலகட்டத்தில் செல்போன் என்பது வெறும் பேசுவதற்காக மட்டுமே பயன்படுத்துவது அல்ல. தனிப்பட்ட முக்கிய தகவல்களை சேமித்து வைக்கும் பெட்டகமாகவும், இணையதள பயன்பாட்டுக்காகவும் என ஒரு சிறிய கணினி போலவே பயன்பாட்டில் உள்ளது. செல்போன்களை பறிகொடுக்கும் பலர் பதறி அடித்து கொண்டு காவல் நிலையம் செல்வதற்கு அதில் உள்ள தனிப்பட்ட தகவல்களை யாரும் களவாடிவிடக்கூடாது என்பதற்காக தான். 




மேலும் திருடப்பட்ட செல்போன்களை காவல்துறையினர் அந்த செல்போன் நிறுவனத்தின் உதவியுடன் ஒரு பிரத்யேக மென்பொருள் மூலமாக செல்போன் டவரை வைத்து கண்டு பிடித்து விடுகிறார்கள். ஆனால் திருடப்பட்ட செல்போன் பல கைகளுக்கு மாறி வேறு மாநிலங்களுக்கு சென்று விட்டால் கண்டுபிடிப்பது என்பது சற்று கடினம். பர்ஸ்களை பிக்பாக்கெட் அடிக்கும்போது அதில் பணத்துக்கு பதிலாக ஏ.டி.எம். கார்டு இருந்தால் பின்நம்பர் தெரியாமல் பணத்தை எடுக்க முடியாது. ஆனால் செல்போனை திருடி சென்றால் குறைந்தபட்சம் ரூ.1,000-த்துக்காவது விற்று விடலாம். இதே ஆண்ட்ராய்டு செல்போன் என்றால் அதற்கு கள்ளச்சந்தையில் தனிவிலை உண்டு. இன்னும் சில நாட்களில் தீபாவளி பண்டிகை வரவுள்ளது. மக்கள் கூட்டம், கூட்டமாக கடைவீதிகளுக்கு சென்று வருவார்கள். இதற்காக பேருந்துகளில் அதிகமானோர் பயணம் செய்வார்கள். இதை பயன்படுத்தி கைவரிசை காட்டும் கும்பலும் களம் இறங்கக்கூடும். ஆகவே நகைகள் மற்றும் செல்போன்களை பத்திரமாக கொண்டு செல்ல வேண்டியது ஒவ்வொரு தனிநபரின் பொறுப்பு ஆகும்.




மேலும் பேருந்துகளில் பயணம் செய்யும் பெரும்பாலானவர்களுக்கு ஏதாவது பொருட்களை தவறவிடுவது வாடிக்கை தான். ஆனால் நிறைய பேர் செல்போன்களை பறிகொடுத்து வருகிறார்கள். குறிப்பிட்ட சிலர் இதுபோன்ற திருட்டுக்களில் ஈடுபடுகிறார்களா? என காவல்துறையினர் கண்காணிக்க வேண்டும். ஏனென்றால் செல்போன் தற்போது அத்தியாவசியமாக மாறிவிட்டது. ஆகவே செல்போன் மற்றும் நகைகளை திருடும் நபர்களை காவல்துறையினர் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நமது பொருளுக்கு நாம் தான் பொறுப்பாக முடியும். இதற்கு கவனக்குறைவு தான் முக்கிய காரணம். செல்போனை திருடிவிட்டார்கள் என்று கூறுவதைவிட திருட்டு கொடுத்துவிட்டனர் என்று தான் கூறவேண்டும். எல்லா இடங்களிலும் போலீசார் வரமுடியாது.  பேருந்துகளில் செல்லும்போது, நகைகள் மற்றும் செல்போனை அடுத்தவர் கண்களை உறுத்தும்படி கொண்டு செல்லக்கூடாது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். 




இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறும்போது, மாநகர பேருந்துகளில் நகைகள், செல்போன் திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த பேருந்து நிலையங்களில் பயணிகளிடம் துண்டு பிரசுரம் வினியோகித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். ஏதேனும் புகார் வந்தால் உடனடியாக கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட பேருந்தில் இருந்து சந்தேகத்துக்குரிய நபர்கள் யார்? இறங்கி சென்றார் எனவும் கண்காணித்து தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும், தனியார் பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி வருகிறார்கள். இதனால் குற்றவாளிகளை கண்டுபிடிப்பது எளிதாகிறது. ஆனால் அரசு பேருந்துகளில் இன்னும் கேமரா பொருத்தப்படவில்லை. இது தவிர, பேருந்து கண்டக்டர், டிரைவர்களை அழைத்து கூட்டமும் நடத்தி விழிப்புணர்வு கொடுத்துள்ளோம். முக்கியமாக பண்டிகைகாலங்களில் குற்றப்பிரிவு காவல்துறையினர் சாதாரண உடையில் பேருந்துகளில் பயணிகள் போல் பயணம் செய்து கண்காணித்தும் வருகிறார்கள். பொதுமக்களும் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றனர்.