திருச்சி மத்திய மண்டல காவல்துறை ஐ.ஜி. கார்த்திக்கேயன் பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு அதிரடியாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி தொடர் குற்றசம்பவங்களில் ஈடுபடுவோர்களை கண்காணித்து சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் மத்திய மண்டலத்தில் பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்களை உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். ஆகையால் காவல்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர்களை கைது செய்து வருகிறார்கள். குறிப்பாக பொதுமக்களை அச்சுறுத்தும் செயலில் யார் ஈடுபட்டாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2023 ஆம்  ஆண்டு  குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். 


குறிப்பாக திருச்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட 9 மாவட்டங்களான திருச்சி, புதுக்கோட்டை கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பணி புரியும் காவல்துறை அதிகாரிகளும், ஆளினர்களும் சிறப்பான முறையில் கடந்த 2023ம் வருடம் பணியாற்றி குற்றச் சம்பவங்களை 2022ம் ஆண்டைக் காட்டிலும் குறிப்பிடத்தக்க அளவில் குறைத்து உள்ளனர். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், 2022 ஆண்டுடன் ஒப்பிடுகையில், கொலைக்குற்றங்கள் 2023ம் ஆண்டில் 18 சதவீதம் குறைவாகவும், ஆதாய கொலை வழக்குகள் 8 சதவீதம் குறைவாகவும், கொடுங்குற்றங்கள் 36 சதவீதம் குறைந்தும், பாலியல் தொடர்பான குற்றங்கள் 38 சதவீதம் குறைந்தும் பதிவாகி உள்ளன.கொலை வழக்குகளை குறைக்க சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.




மேலும், மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திக்கேயன் அறிவுரையின்பேரில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி அவர்களை காவல்துறையினர் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து, கொலைச் சம்பவங்களில் ரவுடிகள் ஈடுபடாத வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் ஒரு பகுதியாக ரவுடிகள் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் ஆய்வு செய்யப்பட்டு, வழக்குகளில் விசாரணைக்கு ஆஜர் ஆகாமல் இருந்த ரவுடிகள் மீது நீதிமன்றத்தில் பிடி கட்டளை பெறப்பட்டு அவை நிறைவேற்றப்பட்டன. 2023ம் ஆண்டில் ரவுடிகள் மீது நிலுவையில் இருந்த 168 பிடி கட்டளைகள் நிறைவேற்றப்பட்டு அவர்கள் விசாரணைக்கு ஆஜர் ஆக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மேலும் காவல் நிலையங்களில் பெறப்படும் புகார் மனுக்கள் முறையாக விசாரிக்கப்பட்டு உடனடியாக சட்டப்படி தீர்வு காணப்பட்ட காரணத்தினால் முன் விரோதம் காரணமாக நிகழும் கொலைச் சம்பவங்கள். குடும்ப பிரச்சினை காரணமாக நிகழும் கொலைச் சம்பவங்கள் பெருமளவில் 2023ம் ஆண்டில் கட்டுப்படுத்தப்பட்டது. ஆகையால் இனிவரும் காலங்களில் தொடர் கொலை, திருட்டு, வழிபறி, மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் குற்ற செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கபடும் என காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.