துரைசாமி மற்றும் சாமி என்கிற சோமசுந்தரம் ஆகியோர் மீது ஏற்கனவே பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன, இந்நிலையில் கைது செய்யப்பட்ட அவர்களிடமிருந்து நகைகளை மீட்க, காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். அபோது, உறையூர் குழுமாயி அம்மன் கோயில் அருகே சென்றபோது, போலீசாரின் ஜீப்பில் இருந்து இருவரும் தப்பிக்க முயன்றுள்ளனர். துரத்திப்பிடிக்க முயன்றபோது, போலீசார் மீது ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.


இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கையாக, துரைசாமி மற்றும் சாமி என்கிற சோமசுந்தரம் ஆகியோர் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் காயமடைந்த இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, ரவுடிகள் அரிவாளால் தாக்கியதில், காவலர் சிற்றறசு என்பவர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.  தமிழகத்தில் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், திருச்சியில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.


நடந்தது என்ன?


திருச்சி மாவட்டம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனையை தடுப்பதற்காக, காவல்துறை தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், உறையூர் பகுதியில் கஞ்சா விற்பனை அதிகளவில் நடைபெறுவதாக, திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்திற்கு  தகவல் வந்துள்ளது . அதனை அடுத்து துரை, சோமு, அனுராதா மற்றும் ஹரிஹரன் ஆகிய நான்கு பேரையும் காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.  தீவிர விசாரணையில் உறையூர் குழுமாயி அம்மன் கோயில் அருகே, அதிகளவில் கஞ்சாவை  பதுக்கி வைத்துள்ளோம் என கூறி காவல்துறையினரை அந்த நான்கு பேரும் அழைத்துச் சென்றனர்.


தாக்குதலும்.. துப்பாக்கிச்சூடும்..


குறிப்பிட்ட கோயில் அருகே சென்றதும் திடீரென்று துரை மற்றும் சோமு ஆகியோர், தாங்கள் அங்கு மறைத்து வைத்திருந்த கத்திகளை எடுத்து காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினர்.  இதில் காவல் ஆய்வாளர் மோகன் மற்றும் இரண்டு காவலர்கள் மீது கத்தியால் தாக்குதல் நடத்தினர். இதனால் தற்காப்புக்காக காவல்துறையினர் அந்த இரண்டு பேர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனை தொடர்ந்து காயமடைந்த காவல்துறையினர்,  துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த துரைசாமி மற்றும் சாமி என்கிற சோமசுந்தரம் ஆகியோர்  திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


குற்றப்பின்னணி:


திருச்சி புத்தூர் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த துரைசாமி மற்றும் சோமசுந்தரம் என்கிற சாமி இருவரும் சகோதரர்கள் ஆவர். துரைசாமி மீது கஞ்சா கடத்தல்,கொள்ளை, ஆள் கடத்தல் மற்றும் 5 கொலை வழக்குகள் என 69 வழக்குகள் உள்ளன. இதில் திருச்சி மாவட்டத்தில் மட்டும் 30 வழக்குகளும்,  தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மீதி வழக்குகளும் உள்ளன.