திருச்சி மாநகரில் கடந்த சில மாதங்களாக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் புகையிலை, பான் மசாலா, கஞ்சா போன்றவை அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் மாநகர காவல் துறை ஆணையர் காமினி உடனடியாக இத்தகைய குற்ற சம்பவங்கள் ஈடுபடுபவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். அதன்படி பல்வேறு இடங்களில் காவல்துறையினர் அதிரடி சோதனை ஈடுபட்டு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள்.


மேலும், திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி,  அவர்கள் உத்தரவின்பேரில், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், கஞ்சா, குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் குற்றவாளிகள் மீது திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் சட்ட ரீதியான நடவடிக்கைளை எடுத்து வருகிறார்கள்.


அதன்படி, கடந்த 14.12.2023-ந்தேதி பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆலம் தெரு சந்திப்பு அருகில் இளைய சமூகத்தை சீரழிக்கும் தடை செய்யப்பட்ட கஞ்சாவை இருசக்கர வாகனத்தில் வைத்து இளைஞர்களுக்கு விற்பனை செய்வதாக கிடைக்கபெற்ற தகவலின்பேரில் சம்பவ இடம் சென்று சோதனை செய்தபோது அங்கு சந்தேகம்படும்படியாக இருசக்கர வாகனத்தில் சென்ற 3 நபர்களை பிடித்து சோதனை செய்ததில் சுமார் 3 கிலோ கஞ்சாவை ஒரு கட்டை பையில் வைத்திருந்த முதலியார் சத்திரம் பகுதியை சேர்ந்த பெனியாமினி ஆகாஷ் வயது 20/23, த.பெ.சகாய விமல்ராஜ் மற்றும் 2  நபர்களையும், அவர்கள் மறைத்து வைத்திருந்த வாள்கத்தி-2 மற்றும் இரண்டு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தும், குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.




மேலும் விசாரணையில் குற்றவாளி பெனியாமினி ஆகாஷ் மீது பாலக்கரை காவல்நிலையத்தில் கஞ்சா விற்பனை செய்ததாக ஒரு வழக்கும் பொதுசொத்துக்களை சேதப்படுத்தியதாக ஒரு வழக்கும் விசாரணையில் இருப்பது தெரியவந்தது. எனவே, குற்றவாளி பெனியாமினி ஆகாஷ் என்பவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுபவர் எனவும், மேற்படி குற்றவாளியின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு பாலக்கரை காவல் நிலைய காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி,  அவர்கள் மேற்படி குற்றவாளியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் அடைக்க ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து குற்றவாளி மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்ட ஆணையினை சார்பு செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளி அல்லாபிச்சை என்பவர் மீது ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


மேலும், திருச்சி மாநகரில் கஞ்சா, குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனையில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி அவர்களால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.