திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, அவர்கள் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளின் குற்றவாளிகளின் மீது பதிவு செய்து நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார்கள். அதன்படி கடந்த  16.08.2020-ந்தேதி ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெறப்பட்ட புகாரின்பேரில் 1.பசுபதி, 27/24, த.பெ.ரமேஷ்., 2.வரதராஜ் 29/24, த.பெ.ஆனந்த் மற்றும் 3.திருப்பதி, 29/24, த.பெ.திருவரங்கம் ஆகிய 3 பேர் மீதும் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ (POCSO) சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்து புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டு, வழக்கின் குற்றவாளிகள்  மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இவ்வழக்கின் புலன் விசாரணை முடிக்கப்பட்டு, மேற்படி குற்றவாளிகள் 1. பசுபதி, 2.வரதராஜ், 3.திருப்பதி ஆகிய மூவர் மீது கடந்த 23.09.2020- ஆம் தேதி குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தும், மேற்படி வழக்கில் திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி  ஸ்ரீவட்சன் அவர்கள் நீதிமன்ற விசாரணையை முடித்து, நேற்று 11.01.2024-ம்தேதி, மேற்படி குற்றவாளிகள் 1. பசுபதி, 2.வரதராஜ், 3.திருப்பதி மூவருக்கும் போக்சோ ச/பி 5(g), 5(1) r/w 6- ன்படி 20 வருட சிறைத்தண்டனையும், ரூ.10,000/- அபராதமும், 450 இ.த.ச. பிரிவின்படி 5 வருட சிறைத்தண்டனையும், ரூ.4,000/- அபராதமும், மற்றும் 506(ii) இ.த.ச. பிரிவின்படி 1 வருட சிறை தண்டனையும், ரூ.1,000/- அபராதமும், விதித்து தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5,00,000/- இழப்பீடுத்தொகை வழங்கவேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார்கள்.




மேலும் இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் திரு.ஜாகீர் உசேன் அவர்கள் ஆஜராகி அரசு சார்பாக வழக்கு நடத்தி வாதாடினார்கள். இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து, குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த ஸ்ரீரங்கம் காவல் ஆய்வாளர் மற்றும் காவல் ஆய்வாளரின் மேற்பார்வையில் பணிபுரிந்த காவல் ஆளிநர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, அவர்கள் வெகுவாக பாரட்டினார்கள்.


மேலும் திருச்சி மாநகரத்தை பொருத்தவரை பெண்கள், குழந்தைகள் மீதான ஏற்படும் பாலியல் தொந்தரவு குறித்த புகார்களை உடனடியாக விசாரணை செய்து குற்றவாளிகளை கைது செய்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி, காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார். மேலும் பெண்களுக்கு எதிராக பாலியல் தொந்தரவு குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். அதேசமயம் அனைத்துப் பகுதிகளிலும் பாலியல் தொந்தரவு தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ,காவல்துறை தரப்பில் ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.