திருச்சி மாநகர காவல்துறை ஆணையராக காமினி பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக பொதுமக்களை அச்சுறுத்து வகையில் வழிப்பறி, திருட்டு ,கொள்ளை சம்பவங்களின் ஈடுபடுபவர்களை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


மேலும் திருச்சி மாநகர் பகுதிகளில் பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை உடனடியாக கைது செய்து சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


மேலும் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து அவ்வபோது பொதுமக்களிடையே காவல்துறை தரப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்திய 50-க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து திருச்சி மாநகரில் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். போதைப் பொருள் விற்பனை செய்பவர்களை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி உத்தரவிட்டுள்ளார். 




இந்நிலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கத்தில் திருச்சி மாவட்ட உணவு பாதுக்காப்பு துறை மற்றும் பள்ளிகல்வி துறை சார்பாக போதைப்பொருள் எதிர்ப்புகுழு என்ற தலைப்பில் மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.


இதில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், திருச்சி மாநகர காவல்துறை ஆணையம் காமினி, மாவட்ட கல்விதுறை அலுவலர்கள், உணவு பாதுக்காப்பு துறை அதிகாரி ரமேஷ் பாபு , 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துக்கொண்டனர். அப்போது மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி பேசியது..


தமிழர்களின் பெருமையை உலகமே வியந்து பார்த்தது - மாநகர காவல் துறை ஆணையர் காமினி.. 


நமது தமிழர்கள் பண்டைய காலங்களில் கலை, நாகரிகம், வாழ்க்கை முறை , கலாச்சாரம், அனைத்தையும் உலகமே வியந்து பார்த்தது. தஞ்சை கோவில், தடுப்பணைகள், தமிழ்களின் கல்வெட்டுகள், அறிவுதிறன், தொழில்நுட்பம், கலாச்சாரம்  உள்ளிட்ட தமிழர்களின் பெருமையை உலகமே வியந்து பார்த்தது.


ஆனால் தற்போது போதைப்பொருளால் இளைஞர்கள் சமுதாயம் அழிந்து வருகிறது. போதைப் பொருளை முற்றிலும் ஒழிக்க மாணவ, மாணவிகள் ஒத்துழைப்பு மிக அவசியம். நமது பண்டைய காலங்களில் இது போன்ற எந்த தீய பழக்கங்களும் இல்லாமல் தமிழர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். 




போதை பழக்கத்தை முற்றிலும் ஒழிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.


தீய பழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க அரசு அதிகாரிகள், பொதுமக்கள்,  மாணவ, மாணவிகள் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும். ஒரு மாநிலத்தின் முதுகெலும்பு இளைஞர்கள் தான். ஒரு மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு மக்கள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது போதை பழக்கத்தால் இளைஞர்கள் சமுதாயம் அழிந்து வருவதை நாம் தடுக்க வேண்டும். ஆகையால்  போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்ற நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.