சுந்தர சோழன் கால செப்பு தகடு மாயம் - வரலாற்று ஆய்வாளர் அதிர்ச்சி


திருச்சி மாவட்டம்,  லால்குடி, அன்பிலில் உள்ள சிவன் கோவிலில் மிகப் பழமையான செப்பு தகடு இருந்தது. இதை அன்பில் தகடு என்று சொல்வார்கள். இச்செப்பு தகடு மாமன்னர் சுந்தரச்சோழனால் வழங்கப்பட்டது, சுந்தராசோழன் ஆட்சிக்கு வந்த 4ஆம் ஆண்டில் கி பி.961ல் அவருடைய மந்திரிக்கு 10 வேலி நிலத்தை வழங்கிய விபரம் மற்றும் மாதவ பட்டர் முன்னோர்கள் ஸ்ரீரெங்கம் அரங்கநாதர் கோவிலில் செய்த தொண்டுகள் பற்றிய செய்திகளும் இச்செப்பேட்டில் உள்ளது. இத்தகு மதிப்பு மிக்க செப்பு தகடை மீட்டு நமது கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் உலகுக்கு வெளிகாட்டுவது நமது கடமை.


1957 இல் மைசூரில் இருந்து தொல்லியல் துறை குழுவினர் அன்பில் சத்திய வாஹீஸ்வரர் கோவிலில் இருந்த போது அன்பில் செப்பு தகடை நேரில் பார்வையிட்டு படிமம் எடுத்துச்சென்றுள்ளனர். அதன் பிறகு இந்த தகடு இந்தக் கோவிலில் இல்லை. எங்கு உள்ளது என்ற தகவலும் இல்லை.அன்பில் தகடு பற்றிய விபரமும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. எனவே செப்பு தகடு பற்றிய தகவல் அறிந்தவர்கள் அல்லது இந்த செப்பு தகடை வைத்திருக்கின்ற பொதுமக்கள் எங்களை அணுகினால் தக்க சன்மானம் அளிக்கப்படும்.


புராதான பொருளை மீட்டு எடுக்கும் முயற்சியில் அனைவரும் ஈடுபட்டு ஒத்துழைப்பு நல்க வேண்டுகிறோம். மேலும் தகவல் கிடைத்தால் உடனடியாக கீழ்காணும் தொலைப்பேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் என கேட்டுக்கொண்டுள்ளனர். காவல் கண்காணிப்பாளர் தொலை பேசி எண் -9842126150., திருச்சி சரக காவல் ஆய்வாளர் தொலை பேசி எண் -9498156669 ஆகிய எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. 




மேலும் இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர்கள் கூறியது.. 


அன்பில் 1,200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் அனிருத்த பிரம்மராயர். பிராமணரான இவர், ஒரு வைணவ பக்தர். இவரின் தாத்தா அனிருத்தரும், தந்தை நாராயணனும், ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு அமுது படைத்த கொடையாளர்கள்.


அந்த வழியில் இவரும், பங்குனி உத்தரத்தன்று அமுது படைத்தார். மேலும், வறுமையில் உள்ளோருக்கு தானியங்களையும் தானம் அளித்தார். அவர், ராஜராஜ சோழனின் தந்தையான சுந்தர சோழனிடம் அமைச்சராக இருந்தார்.


அனிருத்த பிரம்மராயரின் நிர்வாகத் திறமைக்கு அங்கீகாரமாக, 'பிரமாதிராசன்' என்னும் பட்டத்தையும், மயிலாடுதுறை அருகில், 'கருணாகரமங்கலம்' என்ற பெயரில், 10 வேலி நிலத்தையும் சுந்தர சோழன் வழங்கினார். இவற்றை, மாதவபட்டன் வாயிலாக, 11 செப்பேடுகளில் எழுதி ஒப்படைத்தார்.




சோழர்களின் ஆட்சி, நமது கலாச்சாரத்தின் பெருமை அடைங்கிய செப்பு தகடு


சமஸ்கிருதத்திலும், தமிழிலும் உள்ள அன்பில் செப்பேடு, சோழர்களின் மிக முக்கிய ஆவணம் என்பதை விட, தமிழகத்தின் முக்கிய ஆவணமாக உள்ளது. காரணம், தமிழகம் முழுவதையும் ஆட்சி செய்த சோழர்களின் காலத்தில், தானம் அளிக்கப்பட்டதன் அடையாளம் அந்த செப்பேடு ஆகும். 


மேலும் சோழர்களின் தலைமுறை குறித்தும், அவர்களின் போர்கள், வெற்றி, கல்வி, மருத்துவ, ஆன்மிகப் பணிகள் குறித்தும், விரிவான விபரங்கள் உள்ளன. அந்த செப்பேடு, மத்திய தொல்லியல் துறையின், கோல்கட்டா, டில்லி அல்லது மைசூரு பிரிவில் தான் இருக்கும் அல்லது நீதிமன்ற விவகாரங்களில் சாட்சியாக அளிக்கப்பட்டு இருக்கலாம்.


அதை, திறந்தநிலை சுற்றறிக்கை வாயிலாகவோ, மத்திய கலாசார துறையின் வாயிலாகவோ மீட்க, உடனடி நடவடிக்கை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.