தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைத்த உடன் ராமஜெயம் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதற்கான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். அதன்படி ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை தீவிர படுத்தப்பட்டது. 


கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் கிடந்த ராமஜெயம் கொலை வழக்கை, திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு சிறப்பு புனாய்வு குழு அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர். 




திருச்சி தொழில்துபர் ராமஜெயம் கொடூர கொலை..


தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரும், தொழிலதிபருமான ராமஜெயம் கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி அதிகாலையில் நடைபயிற்சி மேற்கொள்ளும் போது மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


நீண்ட நாள் காவல்துறையின் தேடுதலுக்கு பிறகு திருச்சி - கல்லணை சாலை, காவிரி கரையோரம் இருந்த முட்புதரில் இரும்பு கம்பியால் கை, கால்கள் கட்டபட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.


மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். 


ராமஜெயம் கொலைக்கு காரணம் தொழில் போட்டியா, அரசியல் ரீதியான பிரச்சனைகளா அல்லது வேறு சில காரணங்களால் என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். திருச்சி மாநகர காவல்துறையினர் சுமார் 1000க்கும் மேற்பட்டோர்களிடம் விசாரணை செய்ததில் எந்த தகவலும் கிடைக்கவில்லை, குற்றவாளிகளை பற்றி ஒரு தகவல்களும் கிடைக்கவில்லை.


ஆகையால்  அதனால், தன்னுடைய கணவர் கொலை வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் ராமஜெயத்தின் மனைவி லதா. நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சி.பி.ஐ-யும் விசாரித்தது. ஆனால், குற்றவாளிகள் யாரென்று கண்டுபிடிக்கப்படவில்லை. 




ராமஜெயம் கொலை வழக்கு சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்றம்


இதையடுத்து ராமஜெயத்தின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவால், இந்த வழக்கு மீண்டும் தமிழ்நாடு காவல்துறையின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு வசம் சென்றது. எஸ்.பி ஜெயக்குமார் தலைமையிலான போலீஸார் திருச்சி ராமஜெயத்தின் கொலை வழக்கை விசாரித்துவருகிறார்கள்.


இதுவரை நடத்தப்பட்ட விசாரணை அறிக்கைகளை ஆய்வுசெய்த சி.பி.சி.ஐ.டி போலீஸார், புதிய கோணத்திலும் விசாரணை செய்துவருகிறார்கள். கொலை நடந்து பத்தாண்டுகளுக்கு மேலாகிவிட்டதால், குற்றவாளிகளைப் பிடிக்க உண்மை கண்டறியும் சோதனையை மேற்கொள்ள சி.பி.சி.ஐ.டி போலீஸார் முடிவுசெய்தனர்.


அதன்படி பிரபல ரவுடிகளான 13 பேர்களின் பட்டியலை தயார் செய்தனர். இதில் ஒருவர் மட்டும் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒத்துக்கவில்லை என சிறப்புபடை போலீஸ் தெரிவித்தனர்.


இதனைத் தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் 12 பேர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கு நீதிமன்றம் மூலம் அனுமதி பெற்றனர்.




ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனை


இதனைத் தொடர்ந்து சென்னையில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் போலீசார் தரப்பில் பல்வேறு கோணங்களில் பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டது.


இதனைத் தொடர்ந்து உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்பட்ட 12 பேர்களின் பதில்களை அறிக்கையாக தயார் செய்து நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்தனர்.


இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படாமல் கிடப்பில் போடப்பட்டதாக கூறப்படுகிறது. அதேசமயம் ராமஜெயம் கொலை வழக்கை விசாரணை செய்த சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்.பி. ஜெயக்குமார் அதிரடியாக மற்றொரு மாவட்டத்திற்கு எஸ்பியாக மாற்றப்பட்டது ஏன்? உண்மை கண்டறியும் சோதனை அறிக்கையை வெளிப்படையாக வெளியிடாதது என்ன காரணம்? ராமஜெயம் கொலை வழக்கு மீண்டும் உயிர் பெறுமா? அல்லது கிடப்பிலே போடப்படுமா ? என்ற கேள்வி அனைவரும் மத்தியில் தற்போது எழுந்துள்ளது.