திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவெள்ளறையில் சிறப்பு மனுநீதி நாள் நிறைவு விழா நடைபெற்றது. விழாவிற்கு, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமை தாங்கினார். லால்குடி கோட்டாட்சியர் வைத்தியநாதன் வரவேற்றார். இதில் திருவெள்ளறை ஊராட்சி தலைவர் லதாகதிர்வேலு பங்கேற்று ஆட்சியரிடம் ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: திருவெள்ளறையில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.இந்தப் பகுதிகளைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்கள், வயது முதிர்ந்தோர், மாணவ-மாணவிகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் சிகிச்சை பெறுவதற்காக சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டி சூழ்நிலை உள்ளது. இது இப்பகுதி மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும், திருச்சியில் இருந்து துறையூர் செல்லும் சாலையில் திருவெள்ளறை பகுதியில் அடிக்கடி வாகன விபத்துகள் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமானோர் காயம் அடைந்துள்ளனர். மேலும் சிலர் இறந்தும் உள்ளனர். எனவே, விபத்துகளில் காயம் அடைவோரை காப்பாற்றும் வகையிலும், இப்பகுதி மக்கள் சிகிச்சை பெறவும் திருவெள்ளறையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்று தொகுதி எம்.எல்.ஏ. கதிர்வனிடம் ஏற்கனவே மனு அளித்துள்ளோம் என்றார்.
மேலும், இதனை தொடர்ந்து எம்.எல்.ஏ. சட்டமன்றத்திலும் பேசி உள்ளார். ஆனால், இதுவரை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மக்கள் நலன் கருதி உடனடியாக திருவெள்ளறையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார். மேலும் மனுவை பெற்ற மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். விழாவில் 505 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். விழாவில், அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் மண்ணச்சநல்லூர் தாசில்தார் சக்திவேல் முருகன் நன்றி கூறினார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்