திருச்சி: திருச்சி பஞ்சப்பூரில் பிளாட் இருக்கா... அப்போ நீங்க செம அதிர்ஷ்டசாலிதான் போங்க. இல்லையா... படக்குன்னு கிடைக்கிற பிளாட்டை வாங்கி போடுங்க... வருங்காலத்தில் அமோகமான வருமானம் கிடைக்கும்ங்க.
திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் திருச்சி புறநகர் பகுதியான பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் சுமார் ரூ. 400 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகிறது. ஏறத்தாழ பணிகள் முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது பஞ்சப்பூரில் ரியல் எஸ்டேட் தொழில் கொடிகட்டி பறக்கும் நிலையில் விரைவில் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வரும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
நேற்றைய சட்டசபை கூட்டத்தில் வெளியிடப்பட்ட தமிழ்நாடு அரசு நகராட்சி நிர்வாகக் கொள்கை விளக்க குறிப்பில் இந்த அறிவிப்பு இடம் பெற்றுள்ளது. தமிழகத்தின் இதயம் என்று திருச்சியை சொல்லலாம். காரணம் தலைநகரான சென்னைக்கு அடுத்து அதிக அளவிலான மத்திய அரசின் தொழில் நிறுவனங்கள் திருச்சியில்தான் அமைந்துள்ளது. இதனால் அப்போதே இதை மினி சென்னை என்று மக்கள் அழைத்து வந்தனர். துப்பாக்கி தொழிற்சாலை, பெல் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இங்கு செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தின் வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு என அனைத்து பகுதிகளையும் இணைக்கும் மையம் திருச்சி தான். சாலை மார்க்கமாகவும் ரயில் மார்க்கமாகவும் தமிழகத்தை இணைக்கும் புள்ளியாக திருச்சி விளங்கி வருகிறது. திருச்சியில் ரயில் நிலையம், விமான நிலையம், முக்கியமான 2 பேருந்து நிலையங்கள் அமைந்திருக்கிறது. விமான நிலையத்தை தவிர மற்ற அனைத்துமே திருச்சி நகருக்குள் தான் அமைந்திருக்கிறது. அந்த வகையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், ரயில் நிலையம் ஆகியவை நகரில் மையப் பகுதியில் செயல்பட்டு வருகின்றன.
வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலும் உள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் சத்திரம் பேருந்து நிலையத்திலும் வந்து செல்கின்றன. வெளியூரில் இருந்து வருபவர்கள் திருச்சியில் பிற பகுதிகளுக்கு செல்ல வேண்டுமென்றால் மத்திய பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து, சத்திரம் பேருந்து நிலையம் சென்று தங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு போக வேண்டும். இதனால் திருச்சி மாநகரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
இதனையடுத்து திருச்சியில் புறநகரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து திருச்சி புறநகர் பகுதியான பஞ்சப்பூரில் பிரம்மாண்டமாக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு பதிலாக கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டது, போல பஞ்சப்பூரில் சுமார் ரூ.400 கோடி ரூபாய் மதிப்பில் பிரம்மாண்டமாக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்டதாகவே கூறப்படுகிறது. ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், சரக்கு வாகன நிறுத்த முனையம், சோலார் திட்டங்கள் ஆகியவற்றோடு திருச்சி டைடல் பார்க்கும் பஞ்சப்பூரில் தான் அமைய இருக்கிறது.
பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை பொருத்தவரை ஏசி வசதி, சர்வீஸ் சென்டர், எஸ்கலேட்டர், லிஃப்ட், ஆம்னி பேருந்து நிறுத்தம், அரசு பேருந்து நிறுத்தம், உள்ளூர் பேருந்துகள் நிறுத்தம், பயணிகளுக்கான காத்திருப்பு அறைகள், ஓய்விடம், உணவகம், கழிவறை, 24 மணி நேர கண்காணிப்பு, உதவி மையங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள், புல்வெளி, பூங்கா, நடைபாதை உள்ளிட்டவை அமைக்கப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் இன்னும் சில நாட்களில் அனைத்து பணிகளும் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பஞ்சப்பூர் மக்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியை தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தமிழ்நாடு அரசு நகராட்சி நிர்வாக கொள்கை விளக்க குறிப்பு வெளியிடப்பட்டது. அதில் திருச்சியில் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நகராட்சி காலி பணியிடங்களை நிரப்புவது, நீர் நிலைகளை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் குறித்தும் கொள்கை விளக்க குறிப்பில் இடம் பெற்று இருக்கிறது. ஏற்கனவே பஞ்சப்பூரின் டைடல் பார்க், ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் உள்ளிட்டவை காரணமாக வீட்டுமனை விற்பனை விண்ணை தொட்டிருக்கிறது. இதை அடுத்து அருகில் உள்ள பகுதிகளில் ரியல் எஸ்டேட் தொழில் சூடு பிடித்திருக்கும் நிலையில் அங்கு மக்கள் வீட்டு மனைகள் மற்றும் நிலங்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனால் திருச்சியின் இதய பகுதியாக பஞ்சப்பூர் மாறி வருகிறது. இங்கு உங்களுக்கு வீட்டு மனை இல்லாட்டி, உடனே வாங்கி போடுங்க. வரும்காலத்தில் அட்டகாசமான வருமானத்தை உங்களுக்கு அள்ளித்தரும் பாருங்க. எனவே இனியும் காலதாமதம் செய்யாதீங்க. படக்குன்னு பஞ்சப்பூர் போங்க... பிளாட்டை வாங்குங்க. ஒரு சில ஆண்டுகளில் இதன் மதிப்பு பல மடங்கு உயர்ந்து இருக்கும்.