திருச்சியில் உரிய அனுமதியின்றி கட்டப்பட்ட 100 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. திருச்சி உய்யக்கொண்டான் திருமலையைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரையை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், திருச்சி உய்யக்கொண்டான் திருமலை பகுதியில் விதிமுறைகளை மீறி 100 வீடுகள் கொண்ட குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பல்வேறு விதிமுறை மீறல்கள் உள்ளது. உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற உத்தரவுகள்படியும், தமிழக அரசு விதித்துள்ள உள்ளாட்சி துறைகளின் விதிகளை மீறியும் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. 54 சதவீதம் விதிகளை மீறி கட்டிடம் கட்டப்பட்டிருக்கிறது. கட்டிட விதிமீறல் தொடர்பாக திருச்சி மாநகராட்சி, மாவட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடங்களை இடிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த மனு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயணபிரசாத் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உரிய அனுமதியின்றி கட்டப்பட்ட 100 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க உத்தரவிடப்பட்டது.





மேலும் அனுமதியின்றி கட்டப்படும் கட்டிடத்திற்கு துணைபோன அனைத்து அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து அறிக்கை தரவும் ஆணையிடப்பட்டது. இனி இவ்வாறு செயல்படும் அதிகாரிகள், முக்கியத்துவம் இல்லாத பதவிகளுக்கு மாற்ற வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். தவறு செய்த அதிகாரிகள் மீது 6 வாரத்தில் நடவடிக்கை எடுக்க தவறினால் வருவாய் துறை செயலர் நேரில் ஆஜராக நேரிடும் என எச்சரித்த நீதிபதிகள், அனுமதியின்றி கட்டிய கட்டிடத்தில் வீடு வாங்கி பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உரிமையாளர் உரிய நிவாரணம் தர ஆணையிட்டனர். இதனை தொடர்ந்து திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பாக அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆலோசனை நடத்தினார். பின்பு அனுமதியின்றி கட்டபட்டுள்ள கட்டிடத்தை இடிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.