தமிழகத்தில் கடந்த 8-ந்தேதி முதல் நேற்று வரையில் (14-ந்தேதி) 120 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 18 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு என்று தனியாக வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு தேவையான மருந்துகள் இருப்பில் வைக்கப்பட்டு உள்ளது. தினசரி பாதிப்பு சராசரியாக 15 முதல் 20 வரை பதிவாகி வருகிறது. பாதிப்பு அதிகரித்து வருவதால் வீடுகள் தோறும் சென்று குடிநீர் தொட்டிகளை ஆய்வு செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதேபோல, டெங்கு தடுப்பு பணிகளை கிராமங்கள் தோறும் சென்று மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்கிடையே தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:




மாநிலத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருவதால், மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்புகளை கண்காணிப்பது முக்கியம். குறிப்பாக டெங்கு காய்ச்சலை தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். டெங்கு காய்ச்சலுக்கு காரணமான ஏடிஸ் கொசு உற்பத்தியாவதை தடுக்க தீவிரமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். ஏடிஸ் கொசு உற்பத்தியாகாமல் இருக்க வாரத்துக்கு ஒருமுறை அனைத்து பகுதிகளையும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் எவை? என்பது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். அனைத்து உள்ளாட்சிகளிலும் கொசு ஒழிப்பு மருந்துகளை இருப்பு வைத்திருப்பதை உறுதி செய்யவேண்டும். கொசு உற்பத்திக்கு காரணமாக இருக்கும் திறந்த வெளியில் கிடக்கும் பிளாஸ்டிக் பைகள், டயர்கள் போன்றவற்றை அகற்றவும், டெங்கு தடுப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு வார்டுகளை உருவாக்க அரசு ஆஸ்பத்திரி டீன் மற்றும் சுகாதாரத்துறை இணை மற்றும் துணை இயக்குனர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். டெங்கு பரிசோதனைக்கான உபகரணங்கள் போதுமான அளவு இருப்பதை உறுதி செய்யவேண்டும். டெங்கு பாதிப்புக்கான மருந்துகள் போதுமான அளவில் இருப்பு வைத்திருக்க வேண்டும். ரத்த வங்கிகளில் போதுமான அளவு ரத்தம் இருப்பதை உறுதி செய்யவேண்டும். டெங்கு பரவலை தடுக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.




இந்த நிலையில் திருச்சி, திருவானைக்காவல், நரியன் தெருவை சேர்ந்த ராஜ சுகுமார் என்பவரது மனைவி கனகவல்லி (வயது 38) மர்ம காய்ச்சலுக்கு பலியாகி உள்ளார். இவர் சில தினங்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் நேற்று சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். அவருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி ஏதும் இ ல்லை என மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது. மர்ம காய்ச்சலுக்கு பெண் பலியான சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.