திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க 46-வது ஆண்டு விழா திருச்சியில் நேற்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு சங்க தலைவர் முல்லை சுரேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் வெங்கட் வரவேற்றார். அரசு வக்கீல்கள் சவரிமுத்து, மோகன், திருச்சி பார் அசோசியேசன் தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் கண்ணன், மகளிர் பார் அசோசியேசன் தலைவர் ராஜேஸ்வரி, செயலாளர் ஜெயந்திராணி, சிட்டி வக்கீல் சங்க தலைவர் புஷ்பராஜ், செயலாளர் முத்துமாரி, திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க பொருளாளர் கிஷோர்குமார் மற்றும் மூத்த வக்கீல்கள் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் முரளிசங்கர், எஸ்.ஸ்ரீமதி, திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி கே.பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் உள்ளிட்ட பலர் வாழ்த்தி பேசினார்கள்.

Continues below advertisement

மேலும் விழாவில் மூத்த வக்கீல் டி.ஸ்டானிஸ்லாஸ்-க்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை ஐகோர்ட்டு நீதிபதி எம்.நிர்மல்குமார் வழங்கி பேசியதாவது: இளம் வக்கீல்கள் 3 ஆண்டுகளுக்கு பணத்தை எதிர்நோக்கி வேலை செய்யக்கூடாது. உங்கள் மூத்த வக்கீல்கள் எவ்வாறு வாதாடுகிறார்கள் என்று தினமும் பார்த்து கற்று தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுகளில் வாய்தா, ஜாமீன் மனு போன்றவற்றை தாக்கல் செய்யும் முன் அந்த வழக்கை பற்றி முழுமையாக கற்றுக்கொண்டு வர வேண்டும்.

Continues below advertisement

மேலும், அப்போது தான் நீதிபதிகள் கேட்கும் கேள்விகளுக்கு சரியாக பதில்கூறி உங்கள் கட்சிக்காரருக்கு சாதகமான உத்தரவுகளை பெற்றுக்கொடுக்க முடியும். எந்த வழக்காக இருந்தாலும் அதன் உண்மை தன்மையை அறிந்து, அந்த உண்மையின் பக்கம் நின்று வாதிட வேண்டும். திருச்சி மாவட்ட கோர்ட்டுகளில் தான் தரமான தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கு எனது பாராட்டுக்கள். உறுதியாக இருக்க வேண்டும் போலி வக்கீல்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது போல், சட்ட விதிகளை மீறி பொது சொத்துகளை ஆக்கிரமித்தல், பிற குற்றங்கள் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் வக்கீல்களுக்கு பார் கவுன்சில் துணை நிற்கக்கூடாது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 5 சதவீத வக்கீல்கள் செய்யும் தவறு, 95 சதவீத வக்கீல்களுக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது. இளம் வக்கீல்களை வழிநடத்துவதிலும், தவறு செய்யும் வக்கீல்களை தண்டிப்பதிலும் பார்கவுன்சில் உறுதியாக இருக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.

இந்நிலையில் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பாதியிலேயே, உணவு பரிமாறும் இடத்தில் வழக்கறிஞர்கள் சிலர் சாப்பிடுவதற்காக சென்றனர். இதனை அறிந்து, அங்கு வந்த வழக்கறிஞர்கள் சங்க பொருளாளர் வழக்கறிஞர்கள் கிஷோர் குமார் அவர்களிடம் சிறிது நேரம் காத்திருங்கள் நிகழ்ச்சி இன்னும் முடியவில்லை மதிப்புக்குரிய நீதிபதிகள் சிறப்புரை ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது இங்கு உணவு பரிமாறப்பட்டால் உள்ளே அமர்ந்து இருப்பவர்களும், உணவு உண்ண வெளியே வந்து விடுவார்கள்.  இதனால் நீதிபதிகள் பேசும்போது, இருக்கைகள் காலியாக இருக்கும் ஆகவே மதிப்புக்குரிய நீதிபதிகள் பேசி முடித்ததும் உணவு பரிமாறப்படும் என தெரிவித்தார்.  அப்போது அங்கு இருந்த 10-க்கும் மேற்பட்ட  வழக்கறிஞர்கள் சங்க பொருளாளர் வழக்கறிஞர்கள் கிஷோர் குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் அவரை தரக் குறைவாக பேசி அங்கிருந்த சாப்பாட்டு பாத்திரங்களை தள்ளிவிட்டு அந்த பாத்திரத்தால் கிஷோர் குமாரை கடுமையாக தாக்கினர். 

மேலும் அங்கு போடப்பட்டிருந்த நாற்காலிகளை எடுத்து அவர் மீது வீசி எறிந்து கடுமையாக தாக்கினர். அப்போது நிகழ்ச்சி நடைபெறும் இடத்திலிருந்து மூத்த வழக்கறிஞர்கள் வெளியே வந்து தாக்குதல் நடத்திய வழக்கறிஞர்களை அங்கிருந்து வெளியேறும்படி கூறினர். அதனை தொடர்ந்து வழக்கறிஞர்கள் அங்கிருந்து சென்றனர். உணவு பரிமாறும் இடத்தில் பொறுமையாக காத்திருங்கள் என கூறிய சங்கத்தின் பொருளாளர் கிஷோர் குமாரை வழக்கறிஞர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சங்க பொருளாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தாக்குதலில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் யார் என்பது குறித்து கண்டோன்மென்ட் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.