திருச்சி, அரியமங்கலத்தை சேர்ந்தவர் விஜய் (வயது 29). இவர் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்தார். இதனால் அவரை கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு அவருடைய மனைவி குடிபோதை தடுப்பு மையம் ஒன்றில் சிகிச்சைக்காக சேர்த்து இருந்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் இரவு அந்த மையத்தில் இருந்து திடீரென தப்பினார். பின்னர் அவர் ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை பகுதியில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றதாக கூறப்படுகிறது. இதை கண்ட பொதுமக்கள் அவரை பிடித்து ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு அவரிடம் நேற்று காலை போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் இது குறித்து அவரது மனைவிக்கு போலீசார் தகவல் தெரிவித்து வரவழைத்தனர்.
இதனை தொடர்ந்து போலீஸ் நிலையம் வந்த அவரது மனைவி விஜய்யை பார்த்து நீ திருந்தவே மாட்டியா?. மதுப்பழக்கத்தில் இருந்து மீட்க தானே குடிபோதை தடுப்பு மையத்தில் சிகிச்சைக்கு சேர்த்து இருந்தேன். அங்கிருந்து வந்துவிட்டாயா? என கூறி திட்டியுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த விஜய் அங்கு கிடந்த கண்ணாடி துண்டை எடுத்து கழுத்தில் அறுத்துக் கொண்டார். இதனை சற்றும் எதிர்பார்க்காத போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விஜய் கழுத்தில் அறுத்துக் கொண்டதால் அவருக்கு தையல் போடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பம் போலீஸ் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீஸ் துணை கமிஷனர் (வடக்கு) அன்பு, உதவி கமிஷனர் நிவேதாலெட்சுமி ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்