அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கொள்ளை, வழிப்பறி போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக வீட்டில் தனியாக இருக்கும் முதியோர்கள், பெண்கள் என அவர்களை நோட்டமிட்டு இரவு நேரங்களில் வீட்டில் இருக்கும் நகைகள், பணத்தை கொள்ளை அடித்து செல்கின்றனர். மேலும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரே இரவில் 3 வீடுகளில் நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள ஜெமீன்கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் உலகநாதன் (வயது 50). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ரேணுகா நேற்று இரவு வழக்கம்போல் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு சாப்பிட்ட பின் வீட்டுக்குள் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு 2 மணி அளவில் கழுத்தில் கிடந்த தாலிச்சங்கிலி நகர்ந்து போவதுபோல் உணர்ந்த ரேணுகா திடுக்கிட்டு எழுந்துள்ளார். அப்போது மர்மநபர்கள் கழுத்தில் கிடந்த தாலிச்சங்கிலியை அறுக்க முற்பட்டபோது தாலிச்சங்கிலியை பிடித்துக்கொண்டு அலறி கத்தியபடி ரேணுகா போராடி உள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்டு யாரேனும் வந்துவிடுவார்களோ? என்று மர்மநபர்கள் தாலிச்சங்கிலியில் பாதியை மட்டும் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.




இதையடுத்து ரேணுகாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்தனர். தாலிச்சங்கிலியை பறிப்பதற்கு முன்பாக மர்மநபர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், ரூ.25 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவைகள் கொள்ளையடித்தது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து ரேணுகா ஆண்டிமடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து, தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது வீட்டுக்கு வெளியே படுத்திருந்த வளர்ப்பு நாயை பார்த்தபோது அது மயக்க நிலையில் இருந்துள்ளது. கொள்ளையர்கள் கொள்ளையடிப்பதற்கு முன்பே வீட்டுக்கு பின்புறத்தில் நின்று மது அருந்திவிட்டு, வீட்டில் இருந்த வளர்ப்பு நாய்க்கு மயக்க பிஸ்கெட் கொடுத்து மயக்கம் அடைய செய்து விட்டு சாவுகாசமாக வீட்டின் பின்புற கதவை உடைத்துள்ளனர். பின்னர் உள்ளே சென்று பீரோவில் இருந்த 4 பவுன் நகைகள், 3 பவுன் தாலிச்சங்கிலி, வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிய வந்தது. இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள், முதியோர்கள் அருகில் உள்ள காவல்நிலையங்களில் தகவல் தெரிவிக்கவும். மேலும் சந்தேகம்படும்படி நபர்கள் தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுகொண்டுள்ளனர்.