திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்மாரை நேரில் சந்தித்த BMS சங்கத்தின் பொதுச்செயலாளர் சங்கர் கூறியது...நீரேற்று புனல் மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுதல், தொடர்ந்து இயக்குதல் ஆகிய இரண்டு வேலைகளையும் Public Private Partnership அடிப்படையில் தனியார்வசம் ஒப்படைக்கும் தமிழக அரசின் முடிவால், தமிழக இளைஞர்களுக்கு அரசு வேலை பறிபோவதோடு மட்டுமல்லாமல் இட ஒதுக்கீடு ஒழிக்கப்பட்டு சமூக நீதி அழிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, இந்த நீரேற்று புனல் மின் உற்பத்தி நிலைய கட்டுமான வேலைகளை BHEL நிறுவனத்திற்கும், மின் உற்பத்தி நிலையங்களை தொடர்ந்து இயக்கி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வேலைகளை TANGEDCO நிறுவனத்திற்கும் வழங்கி சமூக நீதியை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் அதில் பணி புரியும் ஆயிரக்கணக்கான நேரடி மற்றும் மறைமுக தொழிலாளர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் வழியாக 15.05.2023 அன்று தங்களுக்கு கடிதம் வழங்கி வேண்டுகோள் விடுத்திருந்தோம். அது குறித்து இந்நாள் வரை தமிழக அரசிடம் இருந்து எங்களுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், தமிழக அரசின் அரசாணை மூலம், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில்12 இடங்களில் Pumped Storage Hydro Electric Projects Capacity 14,500MW at an estimated cost of Rs. 77,000 Crore, புதிய நீரேற்று புனல் மின் நிலைய வேலைகளை Public Private Partnership(PPP) அடிப்படையில் தனியார் நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படும் என 13.12.2023 அன்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் 13.12.2023 அன்றைய அரசாணை, தனியார் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாகவும் பொதுத்துறை நிறுவனங்களை நசுக்குவதோடு மட்டுமல்லாமல் சமூக நீதியை ஒழித்து உழைப்புச் சுரண்டலை ஊக்குவிப்பதாகவும் அமைந்துள்ளது. மேலும், அரசுக்கு சொந்தமான நீர் தேக்கங்கள் (Dam) மற்றும் இயற்கை வளங்களை (River) தனியாருக்கு தாரைவார்ப்பதால் விவசாயிகள் பாசனத்திற்காக தண்ணீர் வேண்டி கார்ப்பரேட் முதலாளிகளிடம் கையேந்தி நிற்கும் அவலம் ஏற்படும் என BMS சங்கம் அஞ்சுகிறது. மேலும், 0201.2024 அன்று திருச்சியில் நடைபெற்ற அரசு விழாவில், BHEL நிறுவனத்திற்கு போதுமான கேட்பு ஆணைகள் இல்லாத காரணத்தால் BHEL நிறுவனத்தை நம்பியுள்ள நூற்றுக்கணக்கான MSME நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து தாங்கள் கவலை அடைந்ததை இந்த நேரத்தில் நினைவுகூற விரும்புகிறோம். ஆகவே, 77 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய தமிழக அரசின் நீரேற்று புனல் மின் நிலைய கட்டுமான வேலைகளை BHEL நிறுவனத்திற்கு வழங்கி அதை நம்பியுள்ள MSME நிறுவனங்களையும், அதைச் சார்ந்துள்ள ஆயிரக்கணக்கான ஏழை குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
மேலும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சாதகமான தமிழக அரசின் 13.12.2023 அன்றைய அரசாணையை ரத்து செய்து, நீரேற்று புனல் மின் நிலையம் அமைப்பதில் பாரத தேசத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒரே நிறுவனமான BHEL நிறுவனத்திற்கு ஆணைகளை வழங்கி. BHEL நிறுவனத்தையும் அதை நம்பியுள்ள MSME நிறுவவகளையும் பாதுகாத்த வேண்டுமென தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை BMS சங்கம் வேண்டுகிறது.