திருச்சி மாவட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி கல்லக்குடியில் ஜல்லிக்கட்டு நடந்தது. ஜல்லிக்கட்டை லால்குடி கோட்டாட்சியர் வைத்தியநாதன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். ஜல்லிக்கட்டில் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர், மதுரை, சேலம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்துவரப்பட்ட 744 காளைகள் கலந்து கொண்டன. 390 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். காலை 8.45 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மாலை 5.30 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. காளைகளை அடக்க 15 குழுக்களாக பிரிக்கப்பட்டு குழுவிற்கு 25 பேர் வீதம் வீரர்கள் திடலுக்கு அனுமதிக்கப்பட்டனர். சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். இதில் சில காளைகள் வீரர்களிடம் பிடிபட்டது. சில காளைகள் பிடிபடாமல் நழுவி சென்றது. பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் கார், மோட்டார் சைக்கிள்கள், தங்கம், வெள்ளி காசுகள், கட்டில்கள், பீரோக்கள், சைக்கிள், மின்விசிறி, சில்வர் அண்டாக்கள், டீப்பாய், செல்போன்கள் மற்றும் வேட்டி-சேலைகள் உள்பட ரூ.25 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டது.




 

மேலும் மதுரை மாவட்டம் குலமங்கலம் வக்கீல் திருப்பதி என்பவரது காளைக்கு முதல்பரிசாக கார், திருச்சி மேலூர் குணா என்பவரது காளைக்கு 2-வது பரிசாக மோட்டார் சைக்கிள், திருச்சி பொன்மலைப்பட்டி பிஆர்.சுரேஷ் என்பவரது காளைக்கு 3-வது பரிசாக மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது. மாடுபிடி வீரர் சிவகங்கை மாவட்டம் மேலபூவந்தியை சேர்ந்த அபிசித்தர் முதல்பரிசினையும், அரியலூர் மாவட்டம் மலத்தாங்குளம் ஜனித் 2-ம் பரிசினையும் பெற்றனர். லால்குடி டியோரஞ்சித் சிறப்பு பரிசாக ஒரு காளையை பிடித்து ரூ.25 ஆயிரம் மற்றும் மின்விசிறி, அண்டாக்களை பெற்றார். இதற்கான ஏற்பாடுகளை பேரூராட்சி தலைவரும், பேரூர்கழக தி.மு.க. செயலாளருமான பால்துரை தலைமையில் ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பு குழுவினர்கள் செய்திருந்தனர். இதில் பேரூராட்சி செயல்அலுவலர் குணசேகரன், துணை தாசில்தார் சங்கரநாராயணன் மற்றும் மாவட்ட, ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள், உள்ளாட்சிபிரதிநிதிகள், அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டையொட்டி 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். போட்டியை நத்தம் சரவணன் தொகுத்து வழங்கினார்.

 








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண