தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக கே. எஸ். அழகிரி உள்ளார். அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கனவே முன்னாள் காங்கிரஸ் தலைவர்களால் நியமிக்கப்பட்ட மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் செயல்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த மாநகர் மன்ற உறுப்பினர் ஜவகர் திடீர் என நீக்கம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக மாமன்ற உறுப்பினர் எல். வி. ரெக்ஸ் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே உத்தரவின்படி இந்த நியமனம் நடைபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜவகர் கட்சியின் மூத்த நிர்வாகி ஆவார். அவரை திடீர் என நீக்கிவிட்டு மிகவும் இளைஞரான ரெக்ஸ் நியமனம் செய்யப்பட்டது காங்கிரஸ் கட்சியில் ஒரு பிரிவினர் இடையே கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. மேலும் ரெக்ஸ் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசரின் உதவியாளர் ஆவார். அவரது தீவிர ஆதரவாளராகவும் இருந்து வருகிறார். திருநாவுக்கரசு தனது தனிப்பட்ட செல்வாக்கை வளர்ப்பதற்காக தலைவர் பதவியில் இருந்த ஜவகரை நீக்கி விட்டு ரெக்சை நியமனம் செய்துள்ளதாக குற்றம் சாட்டினர். 




மேலும் இதுகுறித்து திருச்சி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி மாநகர் மாவட்ட பதவியிலிருந்து ஜவகர் நீக்கப்பட்டு புதிய மாநகர் மாவட்ட தலைவராக திருச்சி மாநகர 39 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் எம் பி திருநாவுக்கரசர் தன்னிச்சையாக செயல்பட்டு மாநகர் மாவட்ட பதவியில் இருந்து ஜவகரை நீக்கி உள்ளதாகவும். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து திருச்சி தெப்பக்குளம் பகுதியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் அலுவலகமான அருணாச்சலம் மன்றம் முன்பு எம் பி திருநாவுக்கரசரின் புகைப்படத்தை அடித்தும், காங்கிரஸ் அலுவலகத்திற்கு பூட்டு போட்டு காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி எம்பி திருநாவுக்கரசர் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களையும் மதிக்காமல் செயல்படுவதாகவும் கட்சியில் மூத்த நிர்வாகிகளுக்கு மரியாதை அளிப்பதில்லை எனவும், காங்கிரஸ் கட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளை ஆன ஒருவரை மாவட்ட தலைவராக அவர் நியமித்திருப்பது கண்டனத்துக்கு உரியது என தெரிவித்தனர். 




திருச்சி எம்பி திருநாவுக்கரசர் கடந்த தேர்தலின் போது திருச்சி தொகுதிக்கு வருகை தந்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பின்பு ஆண்டுக்கு 2 முறை மட்டுமே ஏதாவது ஒரு அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு வருகை புரிவார். ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக தனது தொகுதி மக்களை சந்திக்க வில்லை. ஆனால் தற்போது நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் ,அவ்வபோது திருச்சி மாவட்டத்திற்கு வருகை தந்து பொதுமக்களை சந்தித்து புகார் மனுக்களை பெறுகிறார். 4 ஆண்டுகளாக மக்களை கண்டு கொள்ளாத எம்பி திருநாவுக்கரசர், தேர்தல் ஆதாயத்திற்காகவும், பதவிக்காகவும் தற்போது அடிக்கடி திருச்சி மாவட்டத்திற்கு வருகை புரிகிறார். குறிப்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் மூத்த தலைவராக இருக்கும் இவர் டெல்லியில் இருக்கக்கூடிய பழக்கத்தினால் , இவருடைய சுய லாபத்திற்காக, காங்கிரஸ் கட்சியில் உண்மையாக பணிபுரியக்கூடியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார். இவருக்கு ஆதரவாக யார் இருப்பவர்களுக்கும், பணம் அதிகம் செலவு செய்பவர்களுக்கும் பதவியை பெற்று தருகிறார். அந்த வகையில் தான் தற்போது ரெக்ஸ் நியமனம் செய்யப்பட்டது என குற்றம்சாடியுள்ளனர். மேலும் உடனடியாக ரெக்ஸ் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும். இல்லை என்றால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பின்னடைவை சந்திக்கும் என தெரிவித்தனர்.