திருச்சி மாநகராட்சி பகுதியில் சுகாதாரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் 'கியூ ஆர் கோடுகள்' பொருத்தி அங்கு கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சோதனை அடிப்படையில் தனிநபர் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு சுமார் 3000 கியூ ஆர் கோடுகளை மாநகராட்சி விநியோகித்து உள்ளது. இதில் அந்த கட்டிடத்தின் உரிமையாளர் வீட்டு எண், பெயர் உள்ளிட்ட விபரங்கள் மாநகராட்சி மென்பொருளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வீட்டின் கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் வீட்டில் இருந்தபடியே அதன் உரிமையாளர்கள் சொத்து வரி, குடிநீர் வரி போன்றவற்றை மாநகராட்சிக்கு கியூ ஆர் கோட்டினை ஸ்கேன் செய்து அதற்கான தொகையை செலுத்தி விட முடியும். இதனை மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் எதிர்காலத்தில் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, கழிவுகளை சேகரித்த பின்னர் அந்தந்த கட்டிடங்களில் உள்ள கியூ ஆர் கோடுகளை ஸ்கேன் செய்ய தூய்மை பணியாளர்கள் அறிவுறுத்தப்படுவார்கள். மேலும் கழிவுகளை தரம் பிரிப்பதை உறுதி செய்வதற்காக திருச்சி மாநகராட்சி இந்த திட்டத்தை துவக்கியுள்ளது. தமிழக நகராட்சி நிர்வாக துறை முன்னோடியாக இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

 



 

மேலும் இந்த மாதத்திற்குள் கியூ ஆர் கோடு எண்ணிக்கை 4,000 ஆக உயரும் என்று எதிர்பார்க்கின்றோம். ஆகஸ்ட் மாதத்தின் இலக்கு இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றார். இதுதொடர்பாக குடியிருப்பு வாசிகள் கூறும்போது, கியூ ஆர் குறியீடு பொருத்தப்படுவதை வரவேற்கின்றோம். ஆனால் இந்த கியூ ஆர் குறியீடு தாள் மிகவும் லேசாக இருக்கின்ற காரணத்தால் மழைக்காலங்களில் குறியீடு அழியும் நிலையில் உள்ளது. ஆகவே மழையில் எளிதில் சேதமடையாமல் இருக்கும் வகையில் அந்த குறியீடு தாள் லேமினேஷன் செய்து பொருத்தப்பட வேண்டும். அனைத்து வீடு மற்றும் நிறுவனங்களிலும் இந்த முறையை விரைவாக அமல்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

 








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண