திருச்சி மாநகராட்சியை சென்னைக்கு நிகராக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு பல்வேறு புதிய திட்டங்களை வகுத்து செயலாற்றி வருகின்றனர். குறிப்பாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய தார் சாலைகள் அமைப்பது, பாதாள சாக்கடை திட்ட பணிகள், பூங்காக்கள், புதிய வணிக வளாகங்கள், பேருந்து நிலையம் மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.


திருச்சி மாநகராட்சியில் கடந்த சில மாதங்களாக சாலைகள் சீரமைப்பது, புதிய தார் சாலைகள் அமைப்பது, பாதாள சாக்கடை பணிகள், குடிநீர் வடிகால் அமைக்கும் பணிகள உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


அதே சமயம் பல்வேறு இடங்களில் தரமாற்ற சாலைகள் அமைக்கப்படுவதாகவும் சிறு மழை பெய்தாலே சாலைகள் குண்டு குழியுமாக மாறி வருகிறது என பொதுமக்கள் தரப்பிலிருந்து தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.




திருச்சியில் தரமற்ற தார் சாலைகள் அமைப்பு


இந்நிலையில் திருச்சி மாநகராட்சி 56-ஆவது வார்டு கருமண்டபம் இளங்காட்டு மாரியம்மன் கோயில் எதிரே அமைந்துள்ளது திருநகர். இப்பகுதியில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அண்மையில் நடைபெற்ற பணிகளின்போது, சாலையோரம் கார்கள் நிறுத்தியிருந்த இடத்தை மட்டும் விட்டுவிட்டு, மற்ற பகுதியில் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.


திமுக அமைச்சர் கே.என் நேருவின் திருச்சி மேற்கு சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் இந்நிகழ்வு நடந்திருப்பது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதிகளில் இதுபோலவே முழுமையாக சாலைகள் அமைக்காமல் பணிகள் நடைபெற்று வருவதாக அப்பகுதியினர் புகார் தெரிவித்துள்ளனர்.


மேலும், திருச்சி மாநகராட்சி மேயர், ஆணையர் ஆகியோர் நேரில் வந்து ஆய்வு செய்து, தரமான சாலையை முழுமையாக அமைக்க நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.




திருச்சியில் தரமற்றசாலை - பொதுமக்கள் அதிருப்தி 


மேலும் திருச்சி மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் அரசு விதிமுறைகள் படி தார் சாலைகள் அமைக்கவில்லை. தரமற்ற தார் சாலைகளை போடுவதால் பல்வேறு விபத்துக்கள் நடக்கிறது. ஒரு சில பகுதிகளில் தார் சாலை புதிதாக போடப்பட்டு இரண்டு மாதங்களில் மீண்டும் அதே பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆகையால் இதற்கு உரிய நடவடிக்கையை திருச்சி மாநகராட்சி நிர்வாகம் எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.


திருச்சியில் சாலையோரத்தில் கார் நின்று கொண்டிருந்த இடத்தை மட்டும் விட்டுவிட்டு புதிதாக தார்சாலை அமைத்த சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியையும், அரசு அலுவலர்களிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.