உலக வரலாற்றில் நாட்டின் விடுதலைக்காகவும், இனப் போராட்டத்துக்காகவும் தங்களை மாய்த்துக் கொண்டவர்கள் பலர். ஆனால் ஒரு மொழிக்காக தங்களது வாழ்க்கையையே சுருக்கி கொண்டு கருகியவர்கள் தமிழக மக்கள் மட்டுமே. அந்தவகையில் இந்தித் திணிப்புக்கு எதிராகத் தமிழகத்தில் நடந்த 1965-ம் ஆண்டு பெரும் போராட்டங்கள் அதற்கு எதிரான அரசின் அடக்கு முறையில் பல உயிர்ப் பலிகள் என்று 1965-ம் ஆண்டில் நடந்த போராட்டம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. 1965 போராட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டே ஜனவரி 25-ம் நாளை மொழிப்போர் தியாகிகள் தினம் என்று அனுசரிக்கபடுகிறது. இந்நிலையில் இன்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் , பொதுமக்கள் என மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகிறார்கள். அந்தவகையில் திருச்சியில் அதிமுக சார்பில், மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில், அதிமுக மாணவரணி மாவட்ட செயலாளர்கள் தலைமையில், மாவட்ட கழக செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னால் எம்பிக்கள் உள்ளிட்ட அதிமுகவினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த அமைதி ஊர்வலம் செல்கின்றனர்.




இந்தி திணிப்பை எதிர்த்தும், தமிழ் மொழியை காப்பதற்காகவும் கடந்த 1965 ஆம் ஆண்டில் நடந்த போராட்டத்தின் போது ஏராளமானவர்கள் உயிரிழந்தனர். தமிழ் மொழிக்காக தீக்குளித்து இறந்த கீழப்பழுவூர் சின்னச்சாமி, விராலிமலை சண்முகம் ஆகியோரின் நினைவிடங்கள் திருச்சி, தென்னூர், அண்ணா நகர் பகுதியில் உள்ளன. இந்த நினைவிடங்களில் அதிமுகவினர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர். திருச்சி மாநகர் மாவட்ட கழக அதிமுக மாணவர் அணி செயலாளர் இப்ராம்ஷா, திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக மாணவர் அணி செயலாளர் அறிவழகன், அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட கழக மாணவரணி செயலாளர் அழகர்சாமி ஆகியோர் தலைமையில்,  திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலை அருகில் இருந்து அமைதி ஊர்வலம் ஆனது புறப்பட்டது. இந்த அமைதி ஊர்வலம் உழவர் சந்தை வழியாக தென்னூர் அண்ணா நகர் பகுதியில் உள்ள மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியானது நடைபெறுகிறது.


இதில் அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் எம்பி குமார், வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி, திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் துணை மேயர் சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் சிவபதி, வளர்மதி, முன்னாள் எம்.பி ரத்தினவேல், துணைச் செயலாளர் வனிதா,  இளைஞரணி செயலாளர்கள், மாணவர் அணியினர், மகளிர் அணியினர் உள்ளிட்ட அதிமுகவினர் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.