திருச்சி: திருச்சி மாவட்டம் அப்பாதுரை ஊராட்சியில் அங்கன்வாடி மையம் அருகில் கொட்டப்படும் கழிவுகளால் குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த அகிலாண்டபுரம் அருகே அப்பாதுரை ஊராட்சியில் அமைந்துள்ள வள்ளார் நகரில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான குழந்தைகள் வருகின்றனர். 

கோடை விடுமுறை முடிந்து தற்போது பள்ளிகள் கடந்த 2ம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளது. அதேபோல் அங்கன்வாடியும் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த அங்கன்வாடி மையத்தின் அருகிலேயே குப்பைகள், கழிவுகள் என கொட்டப்பட்டு வருகிறது. அருகிலேயே அங்கன்வாடி இருப்பதை கூட எண்ணிப்பார்க்காமல் பல்வேறு கழிவுகளையும் இங்கு கொண்டு வந்து கொட்டுகின்றனர். மேலும் குப்பைகளையும் தீ வைத்து எரித்துவிடுகின்றனர். இதிலிருந்து எழும் புகை குழந்தைகளை பாதிப்படைய செய்கிறது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அங்கன்வாடிக்கு வரும் குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு காய்ச்சல் போன்ற நோய்கள் பரவுவதால் பெற்றோர்கள் மிகுந்த மனவேதனையில் ஆளாகியுள்ளனர். காற்று வேகமாக வீசுவதால் இந்த குப்பைகள் பறந்து அங்கன்வாடி மற்றும் அந்த தெரு முழுவதும் பரவி கிடக்கிறது. குழந்தைகள் நடந்து செல்லும் போது நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். காலதாமதம் இல்லாமல் இந்த பகுதியில் குப்பைகள் கொட்டுவதை தடுத்து நிறுத்தி இப்பகுதி முழுவதும் சுகாதாரப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.