தமிழ்நாட்டில் மணல் குவாரிகள் நடத்தும் தொழிலதிபர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டு உள்ள நிலையில், வழக்கு தொடர்பாக அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட 10 இடங்களில் கடந்த செப்டம்பர் மாதம் சோதனை மேற்கொண்டு கொண்டனர். மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்குக்கு தொடர்புடைய சோதனை எனவும் அதிகாரிகளால் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே அமலாகத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் நான்கு முறை சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது. அவரின் வீடு, அவரது சகோதரர் வீடு, உறவினர்கள் வீடு, தொழில் சம்பந்தமான இடங்கள் ஆகிய இடங்களில் சோதனையானது மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு, அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் புதிதாக வாங்கிய அசையும், அசையா சொத்துகளின் விவரங்கள் கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்த இடங்களில் எல்லாம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் தாளக்குடி, நொச்சியம் மாதவப் பெருமாள் கோவில், கொண்டையம்பேட்டை ஆகிய பகுதிகளில் கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான மணல் குவாரி செயல்பட்டு வந்தது. அரசின் அனுமதியோடு செயல்பட்டு வந்த குவாரியில் கடந்த செப்டம்பர் மாதம் 12-ம் தேதி காலை 8.30 மணி முதல் இரவு 7 மணி வரை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். ஒரு நாளைக்கு எத்தனை லாரிகள் வருகிறது? எவ்வளவு அனுமதி பெற்று வருகிறது, அனுமதியின்றி எத்தனை லாரிகள் வருகிறது, அதற்கான பணம் எவ்வளவு வசூல் செய்யப்படுகிறது, மணல் குவாரியில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்து சிசிடிவி காட்சிகளை வைத்து சோதனைகள் செய்தனர்.
ஒரு நாளைக்கு 50 லாரிகள் வரை தான் மணல் எடுக்க அனுமதி இருந்த பொழுதும் 500 லாரிகளில் மணல் எடுக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சுமார் 7 மணி நேர சோதனைக்கு பின்பு இது தொடர்பாக பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மற்றும் உதவியாளர்களிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதன்பின்னர் அதிகாரிகள் 3 பேரையும் அமலாக்க துறையினர் தங்களது காரில் கூடுதல் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். மேலும், கடந்த மாதம் 17 ஆம் தேதி மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மூடிய குவாரியில் சோதனை செய்தனர். இந்த நிலையில் 3 வது முறையாக ஐ.ஐ.டி மாணவர்கள் உதவியுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் 10க்கும் மேற்பட்டோர் கொள்ளிடம் ஆற்றில் எவ்வளவு ஆழத்திற்கு மணல் அள்ளப்பட்டது என்பது குறித்து ரிவர் சர்வேயர், ஹைட்ரோ சர்வேயர் எனப்படும் கருவியை கொண்டு அளவீடு செய்தனர். மேலும் அளவீடு பணி முடிந்த பின்னரே நிலவரம் தெரியவரும். இதனால் அந்தப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.