திருச்சி: எத்தனை முறை சொன்னாலும் கேட்கலையே என்று துறையூர் நகராட்சி நிர்வாகம் கழிவு நீர் கால்வாயை தூர்வாராமலும், கண்டு கொள்ளாமலும் இருந்ததால் தானே களத்தில் இறங்கி திமுக கவுன்சிலர் தானே தூர்வாரிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம், துறையூர் நகராட்சிக்குட்பட்ட மூன்றாவது வார்டு பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர், இப்பகுதிகளில் தொடர்ந்து கழிவுநீர் செல்லும் சாக்கடையை தூர்வாரப்படாததால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசியது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது என்று பொதுமக்கள் நகர் மன்ற 3-வது வார்டு திமுக உறுப்பினர் கார்த்திகேயனிடம் புகார் தெரிவித்தனர்.
மழைக்காலத்திலும் இந்த கழிவு நீர் சாலையில் ஓடியதால் குழந்தைகள் பாதிக்கப்பட்டனர். எனவே இந்த கழிவுநீர் சாக்கடையை தூர்வார நடவடிக்கை எடுங்கள் என்று மக்கள் புகார் செய்தனர். இதையடுத்து நகர் மன்ற உறுப்பினர் கார்த்திகேயன் நகராட்சி ஆணையர் சுந்தர்ஷாவிடம் இதுகுறித்து தெரிவித்து, மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. தொற்று நோய்கள் பரவினால் அப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு ஆபத்து என்று பலமுறை கூறி உள்ளார். ஆனால் நகராட்சி நிர்வாகம் இதை கண்டுக் கொள்ளவே இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர் கார்த்திகேயன் ஆகியோர் அதிருப்தியில் இருந்து வந்தனர்.
இதற்கிடையில் நகராட்சி நிர்வாகம் தூய்மை பணியாளர்களை மூன்றாவது வார்டு பகுதிகளில் சென்று மக்களிடம் வரி பணம் கேட்டு வசூல் செய்ய சொல்வதை வழக்கமாக செய்து வந்துள்ளது. ஆனால் கழிவு நீர் செல்லும் சாக்கடையால் பாதிப்பு உள்ளது என்று பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. ஆனால் வரி வசூலுக்கு மட்டும் நகராட்சி ஆட்களை அனுப்புகிறதா என்று ஆத்திரமடைந்த நகர்மன்ற உறுப்பினர் கார்த்திகேயன் 3வது வார்டு பகுதிடியில் உள்ள அந்த தானே கழிவு நீர் கால்வாயில் இறங்கி கால்வாயை தூர்வாரினார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அவர் கூறியதாவது: கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக கழிவு நீர் செல்லும் கால்வாயை தூர் வாராமலும் அப்பகுதிகளில் குப்பைகளை எடுக்காமலும் துர்நாற்றம் வீசியதால் அப்பகுதி மக்கள் பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து என்னிடமும் புகார் கூறினர். மக்கள் பணியாற்ற வேண்டிய நகராட்சி நிர்வாகம் இதுகுறித்து கண்டுக் கொள்ளவில்லை. நகராட்சி ஆணையர் சுரேந்தர் ஷாவிடம் இதுகுறித்து தெரிவித்தேன். அப்போதும் நடவடிக்கை எடுக்காததால் நானே அப்பகுதிகளில் உள்ள கழிவுகளை அகற்றினேன். இப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவக்கூடாது. இங்குள்ள குழந்தைகளின் நலன் கருதி இந்த நடவடிக்கையில் இறங்கினேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், தற்போதைய நிலையில் கோடைக்காலத்தில் பரவும் நோய்கள் பற்றி நகராட்சி நிர்வாகம் அறிந்திருந்தாலும் இந்த கழிவு நீர் கால்வாயை சீரமைக்கவோ, தூர்வாரவே எந்த நடவடிக்கையும் எடுக்காதது கடும் கண்டனத்திற்கு உரியது. துறையூர் நகராட்சி நிர்வாகம் அனைத்து பகுதிகளிலும் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும். வரிவசூல் செய்வதில் மட்டும் ஆர்வம் காட்டும் நகராட்சி நிர்வாகம் அடிப்படை வசதிகளை சரியா செய்து கொடுப்பதில் ஏன் ஆர்வம் காட்டுவதில்லை. மக்களுக்கு பாதிப்பு என்றால் அவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும் என்று அதிருப்தி தெரிவித்தனர்.