கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் மற்றும் கேரளா மாநிலங்களில் உள்ள அணைகள் நிரம்பி உள்ளன. இருப்பினும் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறக்கப்படாமல் இருந்தது.


இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து காணப்பட்டது. இந்த நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 1,53,091 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 62,870 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 1,25,500 கன அடியாக அதிகரித்துள்ளது




மேலும் அணையின் நீர் மட்டம் 120 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 91 வது ஆண்டாக ஜூலை 28 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக பாசன வசதி பெறும்.


மேட்டூர் அணையின் நீர் திறப்பினால் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் குருவை, சம்பா சாகுபடி செய்துள்ள டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 21,500 கன அடியாக உள்ளது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.


மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் 16 கண் மதகுகள் மூலமாக 1,03,500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 1,25,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.




திருச்சி மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை


இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில்  காவிரி, கொள்ளிட கரையோர பகுதிகளில் மற்றும் அதனை ஒட்டிய தாழ்வான பகுதிகளில் வசிக்கும் சலவை தொழிலாளர்கள், பொதுமக்கள் தங்கள் உடமைகளுடன் மேட்டுப்பாங்கான, பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.


முக்கியமான படித்துறைகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து அதிகமாக வரும் என்பதால் ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ, மீன்பிடிக்கவோ அல்லது பொழுது போக்கவோ பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. பாதுகாப்பற்ற முறையில் கரையோரங்கள் மற்றும் ஆயத்தான பகுதிகளில் நின்றுகொண்டு பொதுமக்களோ அல்லது மாணவர்களோ "செல்பி" (Selfie) எடுக்க கூடாது.


குழந்தைகள் நீர்நிலைகளில் இறங்கா வண்ணம் கவனமாக பார்த்துக்கொள்ளவேண்டும். கால்நடைகளை குளிப்பாட்டுவதற்கு நீர்நிலைகளுக்கு கொண்டு செல்ல வேண்டாம் எனவும், பாலங்கள் தவிர, பாதுகாப்பற்ற இடங்களில் ஆற்றை கடக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.