திருச்சி மாநகராட்சி அவசர கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் திவ்யா, மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனை தொடர்ந்து கூட்டத்தில் கவுன்சிலர் ராமதாஸ் (தி.மு.க.) பேசியது: மாநகராட்சியில் கூட்ட நடவடிக்கைகளை பார்க்க பார்வையாளர் மாடத்தை திறக்க வேண்டும். சட்டசபையிலேயே பொதுமக்கள் கூட்டத்தை பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் ந.பிரபாகரன் (விடுதலை சிறுத்தைகள்) பேசியது: இ.பி.ரோட்டில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த பணிக்கு இடையூறாக அங்கு கனரக வாகனங்களை நிறுத்தி கொள்கிறார்கள். அந்த வாகனங்களை அப்புறப்படுத்திவிட்டு தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அம்பேத்கர் நூல்களை தமிழில் மொழிபெயர்க்கவும், ஆதிதிராவிடர் பள்ளிகளை மேம்படுத்தவும் நிதி ஒதுக்கிய தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். எல்.ஐ.சி. சங்கர் (சுயே) பேசியது.. கோடைகாலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படும். கடந்த ஆட்சியில் கோடை காலத்தில் பொதுமக்கள் பொழுதைகழிப்பதற்காக காவிரி ஆற்றில் 'சம்மர் பீச்' அமைக்கப்பட்டது. அதேபோல் இந்தமுறையும் 'சம்மர் பீச்' அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்பீஸ்முத்துக்குமார் (ம.தி.மு.க.) - திருவானைக்காவல் பகுதியில் சிறிய தேர் சுற்றி வரும் பகுதி மண் சாலையாக உள்ளது. இதனால் தேர் சுற்றி வர நீண்டநேரமாகிறது. ஆகவே அங்கு தார்சாலை அமைத்து தர வேண்டும். ரெக்ஸ் (காங்கிரஸ்)- பாலாஜிநகர் விரிவாக்க பகுதியில் குடியிருப்புகள் அதிகமாக உள்ளது. அங்கு தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதற்கு தீர்வு காண வேண்டும். எனது வார்டுக்குட்பட்ட பகுதியில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி தர வேண்டும். மேலும், காலி மனைகளில் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். செந்தில்நாதன் (அ.ம.மு.க.) கேள்வி.. நாய்கள் தொல்லையால் மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். தெருநாய்களை கட்டுப்படுத்த மாற்றுவழியை ஆராய வேண்டும். நாய் பிடிக்கும் வாகனங்களை பார்த்தாலே நாய்கள் ஓடிவிடுகின்றன. ஒரு சிலர் நாய்களுக்கு உணவு வழங்குவதாலும் அவை ஒரே பகுதியில் சுற்றி, சுற்றி வருகின்றன. மேயர் அன்பழகன் பதில்.. ஏற்கனவே நாய்கள் கருத்தடை மையம் ஒன்று தான் இருந்தது. மேலும் 3 மையங்கள் புதிதாக கட்ட இருக்கிறோம். இதேபோல் நாய் பிடிக்கும் வாகனங்களும் கோட்டத்துக்கு ஒன்று என்கிற வீதத்தில் வாங்க இருக்கிறோம். மேலும் மேலும் இந்த கூட்டத்தில் கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வார்டுகளில் அடிக்கும் கொசு மருந்துகளால் கொசுக்கள் அழிகின்றனவா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும். ஸ்ரீரங்கம் லெட்சுமிநகர் பகுதியில் திருட்டுகள் அதிகமாக நடப்பதால் அங்கு கேமராக்கள் பொருத்த வேண்டும். மணல்வாரித்துறைரோடு சுடுகாடு பகுதி குப்பைகள் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை கவுன்சிலர்கள் வலியுறுத்தினார்கள்.