திருச்சி மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்: என்னென்ன திட்டங்கள் அறிவிப்பு - முழு விவரம் இதோ

திருச்சி மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிதாக 5 பாலங்களும், ஆதரவற்ற முதியோர் தங்க 3 இல்லங்களும் அமைக்கப்பட உள்ளது.

Continues below advertisement

திருச்சி மாநகராட்சியில் 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல்  நடைபெற்றது. மாநகராட்சி மேயர் அன்பழகன், ஆணையர் வைத்திநாதன் முன்னிலையில் மாநகராட்சி வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவர் முத்துச்செல்வம் மாநகராட்சி வரவு செலவு திட்ட மதிப்பீடு அறிக்கையை (பட்ஜெட்) தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், திருச்சி மாநகராட்சியின் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான மொத்த வருவாய் ரூ.1,026 கோடியே 70 லட்சம், செலவு 1,025 கோடியே 95 லட்சத்து 20 ஆயிரம், உபரி வருமானம் ரூ.74 லட்சத்து 80 ஆயிரம் என குறிப்பிடப்பட்டு இருந்தது. 

Continues below advertisement

திருச்சி மாநகராட்சியில் முக்கிய திட்டங்கள் :

கடந்த ஆட்சியில் திட்டங்களுக்கு 10 நிறுவனங்களில் அதிக வட்டியுடன் வாங்கிய கடன்தொகையில் தற்போது ரூ.38 கோடி அடைக்கப்பட்டுள்ளது.

அம்ரூத் திட்டத்தில் 849 கி.மீ.நீளத்துக்கு பாதாள சாக்கடை பணிகளில் 520 கி.மீ. முடிவுற்றது. 175 கி.மீ.நீளத்துக்கு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு திட்டங்களின் கீழ் 2022-23-ம் நிதியாண்டில் 159.19 கி.மீ.நீளத்துக்கு சாலைகள் சீரமைக்கப்பட்டு, 303 கி.மீ. முடிவுற்றது. 86 கி.மீ. பணிகள் நடைபெற்று வருகிறது. 

மாடு பிடிக்கும் வாகனம் ஒன்று ரூ.30 லட்சம் செலவில் வாங்கப்பட்டு தெருக்கள் மற்றும் சாலையோரங்களில் திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு வருகிறது. உரிமையாளர்கள் அபராதம் கட்டியபிறகு மாடுகள் ஒப்படைக்கப்படுகிறது. மாடுகளை பிடிக்க மேலும் 2 வாகனங்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

வரும் நிதியாண்டில் பல்வேறு திட்டங்களின் கீழ் சுமார் 250 கி.மீ. நீளத்துக்கு சாலைகள் புதுப்பிக்கப்படும்.


திருச்சியில் 5 புதிய பாலங்கள்: 

ஏ.யு.டி.காலனி முதல் குழுமணி சாலை வரை, குழுமிக்கரை சாலை முதல் பைவ்ரோஸ் திருமண மண்டபம் வரை, காராயி அம்மன் கோவில் அருகிலும், துரைசாமிபுரம் முதல் பிச்சைநகர் வரை மற்றும் காட்டூர் பாலாஜிநகர் அருகிலும் என 5 இடங்களில் புதிய பாலங்கள் கட்டப்பட உள்ளது. 

முதற்கட்டமாக வார்டு எண் 51-லிருந்து 57 வரை 24 மணிநேரமும் குடிநீர் வழங்கும் திட்டம் பரீட்சார்த்த முறையில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 

ஒவ்வொரு வார்டுக்கும் ரூ.25 லட்சம் சாலைப்பணிகளுக்கெனவும், மழைநீர் வடிகால் அமைப்பதற்கு ரூ.50 லட்சமும், பல்நோக்கு அலுவலக மக்கள் பயன்பாட்டிற்கு பயன்பாட்டு கட்டிடங்கள் கட்ட ரூ.25 லட்சம் வீதம் மொத்தம் ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் முதியோர் தங்க 3 இல்லங்கள்:

உறவினர்களால் கைவிடப்பட்டஆதரவற்ற முதியோர் தங்குவதற்கு 3 இடங்களில் ஒவ்வொரு இடத்துக்கும் தலா ரூ.1 கோடி வீதம் ரூ.3 கோடி மதிப்பீட்டில் 3 இல்லங்கள் கட்டப்படும். 

5 மண்டலங்களிலும் மண்டலத்துக்கு தலா ரூ.1 கோடி மதிப்பில் 5 சமுதாய கூடங்கள் புதிதாக ரூ.5 கோடியில் கட்டப்படுகிறது.

கொல்லாங்குளம் ரூ.27 கோடியில் அழகுப்படுத்தப்படும்.

அரியமங்கலம் குப்பை கிடங்கில் பூமிக்கடியில் சுமார் 6 அடி ஆழத்துக்கு சுமார் 7 லட்சம் டன் குப்பைகள் பயோமைனிங் முறையில் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

ஸ்ரீரங்கம் காந்திரோடு பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படஉள்ளது.


மேலும் பஞ்சப்பூர் பகுதியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று கொண்டு இருப்பதால் மத்திய பஸ் நிலையத்தில் ஒருங்கிணைந்த அரசு அலுவலக கட்டிடம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும் ஒரே இடத்தில் பணிபுரிய இருப்பதால் பொதுமக்களுக்கு விரைவான சேவை வழங்க முடியும். இதேபோல் பல்வேறு வகையான முக்கிய திட்டங்கள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன. இந்த பட்ஜெட் மீதான விவாதம் வருகிற 3-ந் தேதி (திங்கட்கிழமை) மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் நடக்கிறது.

Continues below advertisement
Sponsored Links by Taboola