தமிழகத்தில் சமீபத்தில் பருவம் தவறி பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெல்மணிகள் அதிக ஈரப்பதத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டது. காவிரி டெல்டா பகுதியில் சம்பா ஒரு போக நெற்பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி சேதமடைந்ததோடு, பல இடங்களில் நெற்பயிரை புகையான் மற்றும் குலை நோய் தாக்கியுள்ளது. இதையடுத்து அதிக ஈரப்பதம் உள்ள நெல்மணிகளை அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இது குறித்து தமிழக அரசு, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில் மத்திய அரசின் வேளாண் தர கட்டுப்பாட்டு குழுவினர் தமிழகத்தில் டெல்டா பகுதியில் நெல்மணிகளில் ஈரப்பதத்தை ஆய்வு செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் அருகே சூரியூரில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய வேளாண் தொழில்நுட்ப குழுவினரான பிரபாகர், யுனூஸ், யோகேஷ் சொரடு, இந்திய உணவு காப்பீட்டு கழகம் செந்தில் மற்றும் ஈரப்பத கணக்கீட்டு பொறியாளர் முத்துகிருஷ்ணன், வேளாண் மண்டல அலுவலர் பாலகுமாரன், தரக்கட்டுப்பாடு அதிகாரி வனிதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வேளாண்) மல்லிகா ஆகியோர் நெல்மணிகளில் ஈரப்பதம் குறித்து நேரில் ஆய்வு செய்தனர்.

 



 

இதனை தொடர்ந்து அங்கு கொட்டப்பட்டிருந்த 2 விவசாயிகளின் நெல்மணிகளில் ஈரப்பதத்தை ஆய்வு செய்தபோது ஒருவரின் நெல் மாதிரி 16.7 என்றும், மற்றொருவரது நெல் மாதிரி 17.9 என்றும் வந்தது. அந்த மாதிரிகளை அதிகாரிகள் குழுவினர் எடுத்துச் சென்றனர். இதையடுத்து அவர்கள் திருவெறும்பூர் அருகே குண்டூர் பகுதியில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் கொட்டப்பட்டிருந்த நெல்மணிகளின் ஈரப்பதத்தை ஆய்வு செய்தனர். பின்னர் மணப்பாறை அடுத்த தெற்கு சேர்பட்டி மற்றும் நல்லாம்பிள்ளை பகுதிகளில் உள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், குவித்து வைக்கப்பட்டிருந்த நெல்மணிகளை மத்திய குழுவினர் சோதனைக்கு உட்படுத்தினர். பின்னர் அந்த நெல்லின் மாதிரிகளை எடுத்துச் சென்றனர். அப்போது தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகள் கூறுகையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரப்படும் நெல்மணிகளை ஓரிரு நாட்களில் கொள்முதல் செய்ய வேண்டும். பருவம் தவறி பெய்த மழையால் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்மணிகளையும் கொள்முதல் செய்ய வேண்டும். நெல் கொள்முதல் நிலையத்திற்கு மேற்கூரை அமைக்க வேண்டும். நெல்லுக்கு லாபகரமான விலை தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர்.









ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண