திருச்சி விமானநிலையத்தில் கடந்த 2 ஆண்டுகளாக வெளிநாட்டு பணம், தங்கம் கடத்தல் அதிகரித்து வருகிறது. இவற்றை தடுக்க சுங்கதுறை அதிகாரிகள் தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டாலும் கடத்தலை தடுக்க முடியவில்லை, தினம்தோறும் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளில் சில தொடர் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வருவது அதிர்ச்சி அளிப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர். இதனை தொடர்ந்து  திருச்சி விமான நிலையம் கடத்தல் கூடாரமாக மாறிவருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் இந்த கடத்தல் சம்பவத்திற்கு சில அதிகாரிகளும் உடைந்தயாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகையால் கடத்தலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

 



 

மேலும் திருச்சி விமான நிலையத்திற்கு பல்வேறு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல் உள்நாட்டு விமான சேவைகளாக பெங்களூர், சென்னை, ஐதராபாத், டெல்லி உள்ள நகரங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களாக தங்கத்தை போன்று வெளிநாட்டு பணம் கடத்தலும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணிக்கு திருச்சியில் இருந்து சிங்கப்பூர் நோக்கி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும் வகையில் இருந்த பயணிகளில் ஒருவரான மதுரையைச் சேர்ந்த முகமது அனீஸ் (வயது 37) என்பவரை சுங்கத்துறை அதிகாரிகள் தனியாக ஒரு அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். இதில் அவரது உடைமையிலிருந்து இந்திய மதிப்பில் ரூ.9.80 லட்சம் மதிப்பிலான அமெரிக்கன் டாலர் மற்றும் சவுதி அரேபியன் ரியால் உள்ளிட்ட வெளிநாட்டு பணத்தாள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அதனை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அவரிடம் அந்த வெளிநாட்டு பணம் அவருக்கு எப்படி கிடைத்தது, யாரிடம் இருந்து வாங்கினார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்தில் சுமார் 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது. நேற்று முன்தினம் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 285 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.இந்நிலையில் நேற்று முன்தினம் சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் இருந்த பயணி ஒருவரை சோதனை செய்தபோது, தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் அவர், தஞ்சாவூரை சேர்ந்த முகமது கனி என்பதும், உள்ளாடைக்குள் மறைத்து தங்கம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 285 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.16 லட்சத்து 40 ஆயிரம் என்று கூறப்படுகிறது.

 








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண