திருச்சி மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்ட பணிகளை செயல்படுத்தி, சென்னைக்கு நிகரான மாநகரமாக மாற்ற வேண்டும் என்பதற்காக அதிகாரிகள் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக சாலைகள் விரிவாக்கம், சாலைகள் நடுவே இருக்கக்கூடிய தடுப்புச் சுவர்களில் அழகிய ஓவியங்கள் வரைதல், வண்ண விளக்குகள் அமைத்தல், உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளை முன்னெடுத்து வருகிறது திருச்சி மாநகராட்சி.  இந்நிலையில் திருச்சி குதுப்பாபள்ளம், பாலக்கரை வேர்ஹவுஸ் ஆகிய பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தலா ரூ.2.5 கோடி மதிப்பில் நூலகத்துடன் கூடிய அறிவுசார் மையங்கள், மேலரண்சாலையில் ரூ.19.70 கோடி மதிப்பில் பன்னடுக்கு வணிக வளாகத்துடன் கூடிய வாகன நிறுத்துமிடம், சிந்தாமணி காளியம்மன் கோயில் பகுதியில் ரூ.6 கோடி மதிப்பில் காய்கறி சந்தையுடன் கூடிய வாகன நிறுத்துமிடம், காந்தி சந்தைபின்புறம் ரூ.13 கோடி மதிப்பில் மீன், இறைச்சிசந்தை, கீழரண் சாலையில் ரூ.6 கோடி மதிப்பில் சின்ன மார்க்கெட், சிந்தாமணி காளியம்மன் கோயில் தெருவில் ரூ.6 கோடி மதிப்பில் பன்னடுக்கு வாகன நிறுத்தம் ஆகியவை கட்டப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இதுவரை திறக்கப்படவில்லை.




மேலும், இதுகுறித்து அதிகாரியிடம் கேட்டபோது அவர்கள் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக இவற்றை திறந்து வைக்க உள்ளதால், அதற்காக காத்திருப்பதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பலகோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டிடங்களை சமூக விரோதிகள் முறையற்ற செயலுக்கு பயன்படுத்திவிடக் கூடாது என்பதற்காக அந்தந்த கட்டிடங்களின் கட்டுமான ஒப்பந்ததாரர்கள் தங்களது பொறுப்பில் காவலர்களை நியமித்து கட்டிடங்களை பாதுகாத்து வருகின்றனர். எனவே, இவற்றை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்கள் திறக்கப்படாமல் உள்ளதால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படும். எனவே, பொதுமக்கள் நலன் கருதியும், மாநகராட்சியின் வருவாயை கருத்தில் கொண்டும், அவற்றை உடனடியாக திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.




மேலும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் முடிவுற்ற பணிகளை கால தாமதப்படுத்தாமல் விரைந்து மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டால் மாநகராட்சிக்கு உரிய வருவாயன் கிடைக்கும் . அதே சமயம் திருச்சி மாநகராட்சியின் செயல்பாடுகள் மற்ற மாநகராட்சிக்கும், தமிழ்நாடு அரசுக்கும் தெரியவரும். ஆகையால் முடிவுற்ற பணிகளை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் . காலதாமதம் படுத்தினால் சிதலம் அடைந்துவிடும் ,மீண்டும் அந்தத் திட்டங்களுக்கு நிதிகள் பெற்று சீரமைக்கு பணி நடைபெறும் இத்தகைய நிலைமைக்கு மாநகராட்சி அதிகாரிகள் வழி வகுக்காமல் உடனடியாக திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.